சமூக நலனே முக்கியம்! நான் வேலையை விட்டு வரமாட்டேன்! தந்தையின் கோரிக்கையை நிராகரித்த மகன்!

நமது நாட்டில் அர்ப்பணிப்போடு, தன்னலம் பாராது, பிறர்நலம் விரும்பி வேலை செய்பவர்களால் தான் இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில், ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த பாண்டித்துரை (26) எனும் இளைஞர் 108 ஆம்புலன்ஸ் டிரைவராக உள்ளார்.
இந்நிலையில், வேலையைவிட்டு வருமாறு பாண்டித்துரையிடம் அவரது தந்தை உருக்கமாக பேசுவதும், அதற்கு ‘சமூக நலனே முக்கியம் நான் வேலையை விட்டு வரமாட்டேன்’, என பாண்டித்துரை பதிலளிப்பதுமான ஆடியோ பதிவு இணையத்த்தில் வைரலாகி வருகிறது.
அந்த ஆடியோவில், பாண்டிதுரையின் தந்தை, ‘இந்த வேலை வேணாம் பா’ யப்பா, ஆம்புலன்சுல கொரோனா நோய் தாக்கியவங் கள, காய்ச்சலோடு வர்றவங்கள நீ தொட்டு தூக்குறியாப்பா என கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த பாண்டிதுரை, நான் தொட மாட்டேன்பா. மாஸ்க், கிளவுஸ் போட்டிருக்கேன். எனக்கு எதுவும் ஆகாதுப்பா. நீ தேவையில்லாம பயப்படாதப்பா என கூறியுள்ளார்.
அதற்கு, நான் சொல்றதை கேளு, பிச்சை எடுத்தாவது நான் உன்னை காப்பாத்துறேன். இந்த வேலை உனக்கு வேணாம்பா. நீ மெட்ராஸ்ல இருக்குற நம்ம சொந்தக்காரங்க வீட்டுக்கு போயிடு. யார்கிட்டயும் சொல்லிடாம போயிடு. போலீஸ் வந்து எங்ககிட்ட கேட்டா கூட, என் பையன் எங்க போனான்னு தெரியாதுனு சொல்லிடுறேன்பா. இந்த வேலையே வேணாம்பா என கூறியுள்ளார்.
எல்லாரும் இப்படி நினைச்சாங்கண்ணா யாருதான் இந்த வேலைய பார்க்கிறது? யாருதான் இவங்கள காப்பாத்துவா? என பாண்டித்துரை கேட்க, ஏலேய், ஊரைப் பார்க்க ஆயிரம் இருக்காண்டா. எனக்கு நீ வேணும்டா. அவனவன் காரியமா பொழச்சுட்டு இருக்கான்டா. உனக்கு யாரோ அவார்டு தர போறது கிடையாது. உனக்கு இது வேணாம்டா. அப்பா சொல்றதைக் கேளு என கூறியுள்ளார்.
அதற்கு பாண்டித்துரை, இல்லப்பா இப்போ இருக்கிற சூழ்நிலையில சமூக நலன் தான் முக்கியம். உங்க பையன ராணுவத்துக்கு சேர்த்து விட்டதாக நினைச்சுக்கோங்க. நான் இந்த வேலையை விட்டு வர மாட்டேன் பா.வச்சுடுறேன் என கூறியுள்ளார்.
இதனையடுத்து, இவருக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்துள்ள நிலையில், நடிகர் கமலஹாசன் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘108 ஓட்டுனர் பாண்டித்துரை நீங்கள் என் நம்பிக்கையின் நாயகன். இவர் போன்ற தன்னலம் பாராது நாட்டிற்காக முன்னிற்கும் வீரர்கள் தான் நம் தேசத்தை இயக்குபவர்கள். பாசத்தில் கதறும் அவரின் பெற்றோரின் குரல், உள்ளத்தை உலுக்கும் போதும் நாடு என்னவாகும்? என்று கேட்கும் அந்த மனம் தான் கடவுள்.’ என பதிவிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
எப்படி கண்ணா இது? சிம்பு குறித்து பேசிய ரஜினிகாந்த்!
March 15, 2025