சமூக, கல்வி ரீதியிலான இட ஒதுக்கீடு தான் சரியானது – அனைத்துக்கட்சி கூட்டத்தில் முதல்வர் பேச்சு!

Default Image

சமூக நீதி கொள்கைக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது என அனைத்துக்கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு வழங்கிய 10% இட ஒதுக்கீடு செல்லும் என சில தினங்களுக்கு முன்பு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருத்தது. இதற்கு காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் வரவேற்பு அளித்த நிலையில், திமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

இதையடுத்து, 10% இடஒதுக்கீடு விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில், இன்று அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சட்டசபையில் உள்ள கட்சிகளின் பிரதிநிதிகள் அக்கூட்டத்தில் பங்கேற்பர் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது. அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி, பாஜக புறக்கணித்த நிலையில் மற்ற கட்சிகளுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது பேசிய முதல்வர், பொதுப்பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு செல்லும் என கடந்த 7-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.

சமூக, கல்வி ரீதியிலான இட ஒதுக்கீடு தான் சரியானது. பொருளாதார ரீதியாக இட ஒதுக்கீடு என்பது அரசியல் சட்டத்தில் இல்லை. பொருளாதார ரீதியாக இட ஒதுக்கீடு செல்லாது என ஏற்கனவே தீர்ப்பு அளிக்கப்பட்டது.முன்னேறிய வகுப்பு ஏழைகளுக்கு உதவுவதை தடுப்பதாக நினைக்க தேவையில்லை. ஏழைகளுக்கான எந்த திட்டத்தையும் நாங்கள் தடுக்க மாட்டோம். சாதி பேதமின்றி ஏழைகளுக்கான நலத்திட்டங்களை மாநில அரசு செயல்படுத்தி வருகிறது.

ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்திற்கு கீழ் உள்ளவர்கள் பயன்பெறலாம் என்றால் அவர்கள் ஏழைகளா?, ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கு மேல் வருமான வரி செலுத்தும் நிலையில் ரூ.8 லட்சம் பெறுவோர் ஏழைகளா?, தினசரி ரூ.2,200 வருமானம் உள்ளவர்களை ஏழைகள் என்று மத்திய அரசு கூறுவது சரியானதல்ல.

சமூக நீதி கொள்கைக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது. மிக மிக அடிப்படையான கொள்கையை நிலைநாட்ட இந்த அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இட ஒதுக்கீட்டால் தகுதி போனது, திறமை போனது என சொல்லி வந்த சிலர் 10% இட ஒதுக்கீட்டை மட்டும் ஆதரிக்கிறார்கள்.

சாதியின் பெயரால் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்கள் முன்னேறுவதற்கு பயன்படும் தத்துவம் தான் சமூக நீதி கொள்கை. 103வது அரசியலமைப்பு சட்டத்தை ஏற்றுக் கொண்டால் சமூகநீதி கொள்கையே உறுகுலைந்து விடும். பொருளாதார ஒதுக்கீடு என்பது சமூக நீதிக்கு முரணானது. அரசியலமைப்பு சட்டத்துக்கும் முரணானது. சமூக நீதியை காக்கும் கடமை தமிழகத்திற்கு தான் அதிகம் உள்ளது என தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்