நீட் தேர்வால் இதுவரை 21 மாணவர்களை இழந்துள்ளோம் – அமைச்சர் உதயநிதி
கடந்த சில நாட்களுக்கு முன்பு, நீட் தேர்வில் தோல்வியடைந்த நிலையில், குரோம்பேட்டையைச் சேர்ந்த தம்பி ஜெகதீஸ்வரன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனை தொடர்ந்து ஜெகதீஸ்வரனின் தந்தையும் தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.
இந்த நிலையில், தமிழகத்தில் நீட் விலக்குக்கு அனுமதி அளிக்காத மத்திய அரசை கண்டித்தும், நீட் விலக்கு மசோதாவுக்கு எதிராக கருத்து தெரிவித்து வரும் ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வரும் 20ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் திமுக அணியினர் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், கட்சி பாகுபாடு இன்றி நாளை நடக்கும் உண்ணாவிரதப் போராட்டத்தில் மாணவர்களுக்காக கலந்து கொள்ளுங்கள்; நீட் தேர்வால் இதுவரை 21 மாணவர்களை இழந்துள்ளோம்; இதற்கு ஒரே காரணம் மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக அரசுதான் என தெரிவித்துள்ளார்.