இதுவரை நீட் தேர்வின் தாக்கம் குறித்து 86,342 பேர் கருத்து – நீட் தேர்வு ஆய்வு குழு தலைவர்!
இதுவரை தமிழகத்தில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து 86,342 பேர் கருத்து தெரிவித்துள்ளதாக நீட்தேர்வு ஆய்வுக் குழுவின் தலைவர் ஏ.கே ராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நீட் தேர்வினால் ஏற்படக்கூடிய பாதிப்பு மற்றும் தாக்கம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை வழங்க வேண்டும் என்பதற்க்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த ஜூன் 10 ஆம் தேதி ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் 8 உறுப்பினர்களை கொண்ட நீட் தேர்வு ஆய்வுக் குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் நீட் தேர்வின் பாதிப்பு குறித்த முதல் ஆலோசனை கூட்டம் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குனரகத்தில் கடந்த 14ஆம் தேதி நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தை அடுத்து பொதுமக்கள் தங்களின் கருத்துக்களை ஜூன் 23ஆம் தேதி வரை தெரிவிக்கலாம் என கூறப்பட்டு இருந்த நிலையில் பலரும் நீட் தேர்வுகள் குறித்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இது குறித்து நீதிபதி ஏ கே ராஜன் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில், பலர் நீட் தேர்வு வேண்டாம் என கருதுவதாகவும், எல்லாவகையான கருத்துகளும் பொதுமக்களிடம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும் நீட் தேர்வின் தாக்கம் குறித்து 86,342 பேர் கருத்து தெரிவித்துள்ளனர் எனவும், எத்தனை பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பது குறித்து வெளியில் தெரிவிக்க முடியாது எனவும் கூறியுள்ளார். இருப்பினும் கருத்து தெரிவித்தவர்களில் அதிகமானோர் நீட் தேர்வு வேண்டாம் என்று மட்டும் தான் கூறியுள்ளனர் எனவும், சிலர் ஓரிரு ஆண்டுகளுக்கு மட்டும் நீட்தேர்வு வைக்கலாம் எனவும் கூறி உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் நீட் தேர்வு குறித்து கருத்து தெரிவிப்பது பொதுமக்களின் சொந்த கருத்து, அதை தவறு என கூறிவிட முடியாது. ஆனால் எல்லாக் கருத்துக்களையும் ஆராய்ந்து முடித்த பின்பு தான் அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும் கூறியுள்ளார். இது மட்டுமல்லாமல் வருகிற ஜூலை 5ஆம் தேதி மக்கள் நீட் தேர்வு குறித்து தெரிவித்த கருத்துக்கள் மீதான ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் எனவும் கூறியுள்ளார். மேலும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து தான் கருத்து கூற கூடாது எனவும், நீதிமன்றத்தில் வருகிற தீர்ப்பை தான் நாங்கள் பின்பற்றுவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.