விடியலுக்கான முழக்கம் பொதுக் கூட்டத்தை கட்சி கொடியேற்றி தொடங்கி வைத்தார் ஸ்டாலின்!
விடியலுக்கான முழக்கம் என்ற சிறப்பு பொதுக்கூட்டத்தின் தொடக்க நிகழ்ச்சியாக கட்சிக் கொடியை ஏற்றினார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
திருச்சியில் திமுகவின் விடியலுக்கான முழக்கம் பொதுக் கூட்டம் இன்று நடைபெறும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, இந்த பொதுக் கூட்டத்திற்கான பிரமாண்டமாக சுமார் 750 ஏக்கரில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதில், மூன்று மேடைகள் அமைக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றவும் நடந்து சென்று தொண்டர்களிடம் பேசவும் நீண்ட நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது.மற்ற இரு மேடைகளில் கட்சியின் தலைமை நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் அமரும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருச்சியில் விடியலுக்கான முழக்கம் என்ற சிறப்பு பொதுக்கூட்டத்தில் தொடக்க நிகழ்ச்சியாக 90 அடி உயர கொடிக் கம்பத்தில் திமுக கொடியேற்றி சிறப்பு பொதுக்கூட்டத்தை தொடங்கி வைத்தார் முக ஸ்டாலின். இந்த கொடியேற்ற தொடக்க விழாவில் நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றனர்.
இன்று மாலையில் 5 மணிக்கு பொதுக்கூட்டத்தில் ‘விடியலுக்கான முழக்கம்’ உறுதிமொழிகள் குறித்தும் தமிழகத்தின் பத்தாண்டு தொலைநோக்கு திட்டங்கள் குறித்தும் அறிவிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.