BJP IT-Wing : அமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு.. பாஜக ஐ.டி. விங் தலைவர் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு.!
தற்போது இந்திய அரசியல் வட்டாரம் முழுக்க பேசுபொருளாக மாறி இருப்பது சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அண்மையில் சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய கருத்துக்கள் தான். சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என அவர் கூறிய கருத்துக்கு எதிராக உதயநிதி மேல் பல்வேறு புகார்கள், கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
பல்வேறு எதிர்ப்புகள் வந்தாலும், தான் கூறிய கருத்தில் இருந்து உதயநிதி ஸ்டாலின் பின்வாங்கவில்லை. நேற்று முன்தினம் திருநெல்வேலியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திமுக கட்சி கூட்டத்தில் பேசுகையில் கூட சனாதனம் ஒழியும் வரையில் எனது குரல் ஒலித்து கொண்டே இருக்கும் என மீண்டும் தனது கருத்தை உறுதிபட கூறியிருந்தார்.
முன்னதாகவே, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 262 பேர் கடிதம் எழுதியுள்ளனர். அவர் மீது பீகார் மாநிலத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூர் சிவில் லைன்ஸ் காவல் நிலையத்திலும் அவர் மீது புகார் பதியப்பட்டுள்ளது. இதுபோல பல்வேறு வழக்குகள் , எதிர்ப்புகள் அமைச்சர் உதயநிதி மீது வந்து கொண்டு இருக்கிறது.
இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் பேசியவுடன், வடமாநிலத்தை சேர்ந்த பாஜக ஐ.டி. விங் தலைவர் அமித் மால்வியா தங்கள் டிவிட்டர் பக்கத்தில், பதிவிடுகையில், சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகிறார். அப்படியானால் அதனை பின்பற்றும் 80 சதவீத இந்து மக்களை இனப்படுகொலை செய்ய சொல்கிறார் என்பனவாறு திரித்து பதிவிட்டு இருந்தார்.
இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திமுக சார்பில், திருச்சி காவல் நிலையத்தில் பாஜக ஐ.டி. விங் தலைவர் அமித் மால்வியா மீது புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரின் பெயரில் 6 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.