மிஸ் பண்ணிடாதீங்க..! SSC, ரயில்வே, வங்கித் தேர்வுகளுக்கான ஆறு மாத இலவச பயிற்சி.!
சென்னை : நான் முதல்வன் திட்டத்தின் கீழ், SSC, ரயில்வே மற்றும் வங்கிப் பணிகளுக்கான கட்டணமில்லா 6 மாதக் கால உறைவிடப் பயிற்சி வழங்குகிறது தமிழக அரசு. அதற்காக 1000 தேர்வர்களை தேர்ந்தெடுக்க நுழைவுத் தேர்வு ஒன்று ஜூலை 14ல் நடைபெற உள்ளது.
நான் முதல்வன் திட்டத்தின் கீழ், நடத்தப்படும் போட்டித் தேர்வை, தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை உதயநிதி ஸ்டாலின் 07.03.2023 அன்று துவங்கி வைத்தார். இதன் மூலம் தமிழ்நாட்டு இளைஞர்கள் ஒன்றிய அரசு வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளை எளிதாக அணுகும் வண்ணம் பல பயிற்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இந்நிலையில் 2024 – 2025 -ம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் உரையில், ஒன்றிய பணியாளர் தேர்வாணையம், இரயில்வே மற்றும் வங்கிப் பணித் தேர்வுகளில் தமிழ்நாட்டு இளைஞர்கள் அதிகம் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்தோடு, தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரம் மாணவர்களுக்கு உண்டு, உறைவிட வசதியோடு கூடிய தரமான ஆறுமாத காலப் பயிற்சி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் அதன் கீழ், இயங்கிவரும் நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவின் வாயிலாக, கட்டணமில்லா உறைவிடப் பயிற்சியினை துவங்கவுள்ளது. இப்பயிற்சிக்கான 1000 பயனாளர்களை தேர்ந்தெடுப்பதற்காக அடுத்த மாதம் 14ம் தேதி அன்று இருவேறு நுழைவுத் தேர்வுகளை நடத்தவுள்ளது.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் மாணவர்கள் ஏதேனும் ஒன்றுக்கு மட்டுமே பயிற்சி மேற்கொள்ள முடியும். இந்த நுழைவுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மாணவர்கள் https://www.naanmudhelves.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விரிவான அறிவிக்கையைப் படித்துப் பார்த்து, இன்று (08.06.2024) முதல் விண்ணப்பிக்கலாம்.
இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 23.06.2024 ஆகும். தேர்வுக்கான ஹால்டிக்கெட் ஜூலை 9ம் தேதி வெளியிடப்படும். தேர்வு ஜூலை 14-ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.