பாடகர் எஸ்.பி.பி 90% மயக்க நிலையில் இருந்து மீண்டு விட்டார் – எஸ்.பி.பி சரண்
தனது தந்தை பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் 90% மயக்க நிலையில் இருந்து மீண்டு விட்டார் என அவரது மகன் சரண் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஆகஸ்ட் 5-ம் தேதி பாடகர் எஸ்.பி.பி.க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். அவ்வப்போது, மருத்துவ நிர்வாகமும், மகன் சரனும் தந்தையின் உடல்நிலை குறித்து வீடியோ வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில், தற்போது தந்தை பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடல்நிலை குறித்து மகன் சரண் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நேற்று நான் சொன்னதைப் போல அப்பாவுக்கு சிகிச்சை பலனளித்து வருகிறது என்றும் 90 சதவீத மயக்க நிலையில் இருந்து மீண்டுள்ளார். என் தந்தைக்காக நீங்கள் காட்டியிருக்கும் அன்பும், அக்கறையும், செய்த பிரார்த்தனைகளுக்கும் எங்கள் குடும்பம் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம். அப்பா மீண்டு வர தீவிர சிகிச்சை அளித்து வரும் எம்ஜிஎம் மருத்துவமனைக்கும், மருத்துவர்களுக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.
மேலும் ஒரு விஷயத்தைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். சமூக வலைதளத்தில் பலர் என்னை இந்தப் பகிர்வுகளை தமிழில் சொல்லச் சொல்லிக் கேட்கிறார்கள். அப்பாவுக்கு அனைத்து மொழியிலும் பல ரசிகர்கள் இருப்பதால் ஆங்கிலத்தில் நான் பகிர்கிறேன் என்று கூறி, நான் மருத்துவர்களுடன் பேசி வருகிறேன் என்றும் பிரார்த்தனைக் கூட்டங்கள் நடக்கின்றன. நடுவில் ரசிகர்களுக்கும் அப்பாவின் உடல்நிலை குறித்து செய்தி சொல்கிறேன். மொழி புரிந்தவர்கள் புரியாதவர்களுக்கு விளக்குங்கள். அப்படிச் செய்யும்போது இந்தச் செய்தியும் பரவும் என்று பேசியுள்ளார்.
#Spb health update 25/8/20 pic.twitter.com/pX1HXqcd2O
— S. P. Charan (@charanproducer) August 25, 2020