சிங்கார சென்னை தற்போது குப்பை நகரமாக மாறியிருக்கிறது – மு.க.ஸ்டாலின்
சென்னையில் எங்கு சென்றாலும் குப்பைகளாகக் காட்சியளிக்கின்றன என முக ஸ்டாலின் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.
சென்னை ஓஎம்ஆர் சாலையில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய திமுக தலைவர் முக ஸ்டாலின், எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதிமுகவை வீழ்த்த முடியாது என முதல்வர் பழனிசாமி சொல்லுகிறார். அதிமுகவை வீழ்த்த நான் எந்த அவதாரமும் எடுக்க தேவையில்லை, நான் நானாகவே இருந்தாலே போதும் என கூறியுள்ளார்.
குப்பைக்கு வரி விதித்த குப்பை அரசு தான் இது. சென்னையில் எங்கு சென்றாலும் குப்பைகளாகக் காட்சியளிக்கின்றன. சிங்கார சென்னையை இந்த அரசு சீரழித்துவிட்டது. மாஸ்க், பிளீச்சிங் பவுடர் வாங்கியதில் பல கோடி கொள்ளை என குற்றசாட்டி, அதிமுகவை கரையன் போல் இபிஎஸ் – ஓபிஎஸ் அரித்துக் கொண்டிருக்கின்றனர் என விமர்சித்துள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்ததும் சென்னையில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் நிரந்தரமாக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார். அரசுப் பேருந்துகளின் கட்டணங்களைக் குறைப்பது குறித்து திமுக ஆட்சியில் பரிசீலிக்கப்படும் என்றும் ஆட்சியில் அமர்ந்தவுடன் போக்குவரத்து தொழிலாளர்களின் குறைகளைத் தீர்ப்போம் எனவும் கூறியுள்ளார். மேலும், தமிழகத்தில் பல தொழில் நகரங்கள் நொடிந்து போனதற்கு ஜிஎஸ்டி தான் காரணம் என குற்றசாட்டியுள்ளார்.