ஒரே நேரத்தில் தேர்வு, ஒரே நாளில் தேர்வு முடிவு – அமைச்சர் பொன்முடி அறிவிப்பு!

minister ponmudi

அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே நேரத்தில் தேர்வு நடத்தி முடிவுகள் வெளியிடப்படும் என அமைச்சர் பொன்முடி அறிவிப்பு. 

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், மாநில கல்விக்கொள்கை தொடர்பாக துணைவேந்தர்களுடன் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று ஆலோசனை மேற்கொண்டார். அமைச்சருடனான இந்த ஆலோசனை கூட்டத்தில் 19 பல்கலைக்கழக துணைவேந்தர்கள், அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி முதல்வர்கள் உள்ளிடோர் பங்கேற்றனர்.

இதன்பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர், மாநிலக் கல்விக்கொள்கை அடிப்படையில்தான் அரசு செயல்படும். தேசிய கல்வி கொள்கையின் சிறப்பம்சங்களையும் மாநில கொள்கையில் கொண்டு வருவோம். கல்லூரிகளில் ஒரே மாதிரியான பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் ஒரே நேரத்தில் தேர்வு நடத்தி, ஒரே நாளில் முடிவுகள் வெளியிடப்படும். பள்ளிகளில் 12-ஆம் வகுப்பு தேர்வுகள் நடத்தப்படுவது போல, அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே நேரத்தில் தேர்வு நடத்தி முடிவுகள் வெளியிடப்படும் என அறிவித்தார்.

ஒரே நேரத்தில் தேர்வு – ஒரே நாளில் முடிவு, ஒரே நாளில் உயர் கல்வி சேர்க்கை ஆகிய அனைத்தும் அடுத்த கல்வி ஆண்டில் அமலுக்கு வரும் என்றும் முதுகலை படிப்புகளுக்கு ஒரே விண்ணப்பம் என்ற முறையும் அறிமுகம் செய்யப்படும் எனவும் தெரிவித்த அமைச்சர், மொழிப்பாடங்களுக்கு அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் பின்பற்றப்படும் என்றார்.

மேலும், தனியார் கல்லூரியில் பணம் கட்டிய பிறகு, வேறு கல்லூரியில் இடம் கிடைத்த மாணவர்களுக்கு கட்டணம் திரும்ப அளிக்கப்படுவதில்லை என புகார் எழுந்துள்ளது.  மாணவர்கள் செலுத்திய பணத்தை திரும்ப அளிக்க வேண்டும் என்றும் அதற்கான சுற்றறிக்கை தனியார் கல்லூரிகளுக்கும் விரைவில் அனுப்பப்படும் எனவும் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்