தவெக மாவட்டச் செயலாளர்கள் நியமனம்… நிர்வாகிகளுக்கு வெள்ளி நாணயம்.!
புதிதாக நியமிக்கப்பட்ட தவெக பொறுப்பாளர்களுக்கு நியமன கடிதத்துடன் வெள்ளி நாணயம் பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை : தவெகவின் புதிய மாவட்டச் செயலாளர்களை விஜய் நியமனம் செய்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட நிர்வாகிகளை அக்கட்சியின் தலைவர் விஜய் சந்திக்கும் நிகழ்வு பனையூரில் இன்று (24.01.2025) காலை நடைபெற்றது.
அப்பொழுது, தவெக தலைவர் விஜய், கட்சி நிர்வாகிகளிடம் தனித்தனியாக ஆலோசித்து வருகிறார். இதனிடையே, தவெக மாவட்ட நிர்வாகிகளுடன் விஜய் நடத்திய ஆலோசனையின் போது, புஸ்ஸி ஆனந்த் வெளியேற்றப்பட்டது பேசுபொருளாகியுள்ளது.
இந்த நிலையில், நடந்து முடிந்த ஆலோசனையில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாக வசதியைக் கருத்தில் கொண்டு, கழகப் பணிகளைத் துரிதமாக மேற்கொள்ள, கழகமானது அமைப்பு ரீதியாக, சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கி 120 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திற்கு ஒரு மாவட்டச் செயலாளர், 10 செயற்குழு உறுப்பினர்கள், ஒரு பொருளாளர், 2 துணைச் செயலாளர் என்ற அடிப்படையில் கட்சி நிர்வாகிகளை நியமனம் செய்துள்ளார்.
முதற்கட்டமாக 19 கழக மாவட்டங்களுக்கு, கழக விதிகளின்படி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, 1 மாவட்ட செயலாளர், 1 இணை செயலாளர், 1 பொருளாளர், 2 துணை செயலாளர் என்ற அடிப்படையில் கட்சியின் மாவட்ட அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு வெள்ளி நாணயம் வழங்கி விஜய் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அதன்படி கரூர் மேற்கு மாவட்ட செயலாளராக மதியழகன் நியமிக்கப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட செயலாளராகப் பரணி பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார். அரியலூர் மாவட்ட செயலாளராக சிவக்குமார் நியமனம் சேலம் மத்திய மாவட்ட செயலாளராகப் பார்த்திபன் நியமிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான கூடுதல் தகவலை பின்வரும் அறிக்கையின் வாயிலாக தெரிந்து கொள்ளவும்.
தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாக வசதியைக் கருத்தில் கொண்டு, கழகப் பணிகளைத் துரிதமாக மேற்கொள்ள, கழகமானது அமைப்பு ரீதியாக, சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கி 120 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 19 கழக மாவட்டங்களுக்கு, கழக விதிகளின்படி மாவட்டப் பொறுப்பாளர்கள்…
— TVK Vijay (@tvkvijayhq) January 24, 2025
வெள்ளி நாணயம்
தவெகவின் புதிய மாவட்டச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு விஜய், வெள்ளி நாணயம் வழங்கியுள்ளார். நாணயத்தின் ஒரு புறத்தில் விஜய்யின் உருவத்துடன் தமிழக வெற்றிக் கழகம் என்று எழுதப்பட்டுள்ளது. மற்றொரு புறத்தில் தவெகவின் வாசகமான பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் மற்றும் கட்சியின் கொடியில் இடம்பெற்றுள்ள செங்காந்தள் மலர் மற்றும் யானை ஆகியவை அச்சிடப்பட்டுள்ளது.
உங்களை நம்பி அரசியல்
நிர்வாகிகளிடம் பேசிய விஜய், “உங்களை நம்பி அரசியலுக்கு வந்துள்ளேன், அடுத்த 10 மாதங்களுக்கு நாம் அனைவரும் மிக கடுமையாக உழைக்க வேண்டும். நம்முடைய இலக்கு ஒன்றே ஒன்று தான், அது 2026, அந்த இலக்கில் உறுதியாக வெற்றி பெற வேண்டும்” என்று கூறியுள்ளார்.
லஞ்சம் வாங்கக்கூடாது
மேலும், புதிய நிர்வாகிகளை நியமிக்க மாவட்டச் செயலாளர்கள் லஞ்சம் வாங்கக்கூடாது. அதுபோன்ற புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக, கட்சியின் பதவி பறிக்கப்படும் என்று விஜய் எச்சரித்துள்ளாராம். முன்னதாக கட்சிப்பொறுப்புக்கு ரூ.15 லட்சம் கேட்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இவ்வாறு எச்சரித்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.