”ஆங்கிலத்தில் கையெழுத்திடும் தமிழக அமைச்சர்கள்”.., தமிழில் போடக்கூடாதா? பிரதமர் மோடி கேள்வி.!
தமிழ்நாட்டில் இருந்து தனக்கு கடிதம் எழுதுபவர்கள் ஆங்கிலத்தில் கையொப்பம் போடுகிறார்கள் என பிரதமர் மோடி விமர்சித்து இருக்கிறார்.

ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார்.
இது இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு ரயில் பாலமாகும், இது ரூ.550 கோடி மதிப்பில் நவீன தொழில்நுட்பத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இதனுடன் ராமேஸ்வரம் – தாம்பரம் இடையேயான புதிய ரயில் சேவையையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து, ராமேஸ்வரத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி பேசுகையில், இன்று துவக்கி வைக்கப்பட்ட பாம்பன் பாலம்தான் இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு ரயில் பாலம். இப்பாலத்தின்அடியிலே பெரிய கப்பல்கள் செல்ல முடியும், நான் சற்று நேரம் முன்னதாகத்தான் ஒரு புதிய ரயில் சேவையையும் ஒரு கப்பல் பயணத்தையும் துவக்கி வைத்தேன். இந்த திட்டத்தின் பொருட்டு தமிழ்நாட்டு மக்களுக்கு நான் மீண்டும் என் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
தொடர்ந்து பேசிய அவர், ‘தமிழக அரசியல் தலைவர்கள் தமிழில் கையெழுத்து போடுமாறு’ வேண்டுகோள் வைத்துள்ளார். இது குறித்து பேசிய அவர்,”மருத்துவ கல்வியை தமிழில் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன். மருத்துவ படிப்பை தமிழில் கொண்டு வர வேண்டும் என்பதே எங்களது பெரும் ஆசை.
தமிழ்நாடு தலைவர்கள் பலர் எனக்கு கடிதம் அனுப்புகின்றனர், ஆனால் அதில் தமிழில் கையெழுத்திடுவதில்லை. கடிதங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் இருக்கும், குறைந்தபட்சம் கையெழுத்தாவது தமிழில் இருக்க வேண்டும்’ என்று கூறியிருக்கிறார்.