அதிர்ச்சி..! குறைதீர் கூட்டத்தில் மனு அளிக்க வந்தவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு..!
வேலூரில் குறைதீர் கூட்டத்தில் மனு அளிக்க வந்தவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. அந்த குறைதீர் கூட்டத்திற்கு மனு அளிக்க வந்த பெருமுகை பகுதியைச் சேர்ந்த 60 வயதான மேஷாக் என்பவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். மேஷாக், தனது மகனின் வேலைக்காக மனு கொடுக்க வந்துள்ளார்.
அப்பொழுது திடீரென ஆட்சியர் அலுவலகத்தில் மயங்கி விழுந்துள்ளார். பின்னர் அருகில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், மேஷாக் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தற்பொழுது வரை மேஷாக் உயிரிழந்ததற்கான காரணம் தெரியவில்லை.