‘ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு’… கூட்டணி குறித்துப் பேசிய தவெக தலைவர் விஜய்!
தமிழகத்தில் ஒரு வீடு விடாமல், அவர்களது உறவாக, உணர்வாக இருந்து செயலாற்றுவோம் என தவெக தலைவர் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் : தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடானது இன்று வெற்றிகரமாக விக்கிரவாண்டி, வி.சாலையில் நடைபெற்றது. இந்த முதல் மாநில மாநாடு அறிவிப்பு வெளியானது முதல், விஜய் அரசியலில் பங்கேற்கப் போகும் முதல் விழா என்பதால் அவர் என்ன பேசுவார்? அவரது கட்சிக் கொள்கைகள் என்னென்ன? என்பது தான் ஒட்டுமொத்த தமிழகத்தின் பேச்சாகவும் இருந்து வந்தது.
அதே போல, கட்சித் தொடங்கிய நாள் முதல், அவர் யாருடன் கூட்டணி அமைத்து தேர்தல் களம் காண்பார்? என்ற கேள்வியும் எழுந்தது. அதற்கான விடையையும் சேர்த்து இன்று நடந்த முதல் மாநாட்டில் தவெக தலைவர் விஜய் மேடையில் உரையாற்றினார்.
இந்த மாநாட்டு மேடையில் கிட்டத்தட்ட 2 மணி நேரம் உரையாற்றிய விஜய், கூட்டணி குறித்துப் பேசுகையில், “நாம் மக்களோடு மக்களாக களத்தில் நிற்கப்போகிறோம். தமிழகத்தில் ஒரு வீடு விடாமல், அவர்களது உறவாக, உணர்வாக இருந்து செயலாற்றுவோம்.
அவர்களது ஆசியுடன், ஆதரவுடன் சிங்கிள் மெஜாரிட்டியோடு வெற்றி பெற வைப்பார்கள் என்ற நம்பிக்கை 100 சதவீதம் இருக்கிறது. இருப்பினும் அந்த நிலையை நாம் முழுமையாக அடைந்தாலும், நமது செயல்பாட்டை நம்பி நம்முடன் சிலர் அரசியல் களம் காண விரும்புவார்கள்.
மேலும், அதற்கான அரசியல் சூழல் உருவாகலாம், அப்படி வருபவர்களை நாம் அரவணைக்கலாம். நம்முடன் இணைந்து களம் காணுவோருக்கும் ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு உண்டு”என விஜய் பேசி இருந்தார். இதன் மூலம், 2026-ல் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைக்க தயாராக இருப்பதை என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.