ஒவ்வொரு ஆண்டும் சதுரங்க விளையாட்டுப் போட்டிகள்., ரூ.22 லட்சம் ஒதுக்கீடு – அமைச்சர் அறிவிப்பு!
பாலியல் தொல்லைகளில் இருந்து மாணவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல்.
இன்று நடைபெற்று வரும் தமிழக சட்டப்பேரவையில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் இடையே விளையாட்டு ஆர்வத்தை வளர்த்திடவும், கடினமான சூழ்நிலைகளை திறம்பட எதிர்கொள்ள ஊக்கப்படுத்தவும், ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நிலைகளில் சதுரங்க விளையாட்டுப் போட்டிகள் நடத்துவதற்கு தமிழக அரசால் ரூ.22 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.
ஒவ்வொரு வருடமும் நவம்பர் 15 முதல் 22ம் தேதி வரை அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களை பாலியல் வன்முறைகளில் இருந்து தடுக்கும் வாரம் கடைபிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களிடம் இருந்தும் பெற்றோர்களிடமிருந்தும் புகார்களை பெற கட்டணமில்லா தொலை பேசி எண் மற்றும் மின்னஞ்சல் வசதியுடன் கூடிய கட்டுப்பாட்டு அறை பள்ளிக்கல்வி இயக்குனரக வளாகத்தில் அமைக்கப்படும்.
இதனிடையே, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஏசி மற்றும் இதர மின் வசதிகள், புதிய தொழில்நுட்பங்கள் என நவீன முறையில் மேம்படுத்தப்படும் என்றும் நூலகங்களின் அனைத்துப் புத்தகங்களின் விவரங்களும் சர்வதேச தரநிலைகளின் அடிப்படையில் சரி செய்யப்பட்டு, ஒரே இணையதளத்தின் மூலம் அனைத்துப் பொது நூலகங்களிலும் உள்ள புத்தகங்களை தேடும் வசதி ஏற்படுத்தப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல் தெரிவிக்கப்ட்டுள்ளது.
2021-22 கல்வி ஆண்டில் 2,098 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என பள்ளி கல்வி துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் 12 புதிய தொடக்கப் பள்ளிகள் அமைக்கப்படும் என்றும் 22 பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் எனவும் அறிவித்துள்ளார்.