பெண் ஐ.பி.எஸ்-க்கு பாலியல் தொல்லை- 2 அரசு சிறப்பு வழக்கறிஞர்கள் நியமனம்..!
பெண் ஐ.பி.எஸ்-க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 2 அரசு சிறப்பு வழக்கறிஞர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்தது.
கடந்த ஏப்ரல் மாதம் பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சுற்றுபயணத்தின் போது அவரின் பாதுகாப்புப் பணியில் இருந்தார். சிறப்பு டிஜிபி தனது மாவட்டத்திற்கு வந்ததால் மரியாதை நிமித்தமாக பெண் எஸ்பி சந்தித்துள்ளார். அப்போது சிறப்பு டிஜிபி, பெண் எஸ்பியிடம் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து முன்னாள் டிஜிபி மற்றும் உள்துறைச் செயலரிடம் பெண் ஐபிஎஸ் புகார் அளித்தார்.
பின்னர், சிறப்பு டிஜிபி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு உதவிய எஸ்.பியும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தற்போது இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கின் விசாரணையை வரும் டிசம்பர் 20 ம் தேதிக்குள் முடிக்க விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம் சாட்டப்பட்ட சிறப்பு டிஜிபி மற்றும் உதவி செய்த எஸ்.பி 2 பேருக்கும் சம்மன் அனுப்பி நாளை மறுநாள் நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில், இந்த வழக்கில் 2 அரசு சிறப்பு வழக்கறிஞர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்தது.