பள்ளிகளில் பாலியல் தொல்லை விழிப்புணர்வு வாரம் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!
போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கையேடு தயாரித்து வழங்கப்படும் என அறிவிப்பு.
தமிழக சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு சம்மந்தப்பட்ட துறையை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். அப்போது, பள்ளிக்கல்வித்துறை விளக்க குறிப்பை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.
அதில், பள்ளி சிறார்களை பாலியல் வன்முறையில் இருந்து தடுக்கும் வரமாக நவம்பர் 15 முதல் 22 வரை கடைபிடிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கையேடு தயாரித்து வழங்கப்படும் என்றும் போக்சோ சட்டம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் பள்ளிகளில் பாதுகாப்பை மேம்படுத்தவும் கையேடு வழங்கப்படும் எனவும் உள்ளது.
மேலும், பள்ளிக்கல்வித்துறை விளக்க குறிப்பில் இடம்பெற்றுள்ள அம்சங்கள், பள்ளிகளில் உள்ள பெண் ஊழியர்களுக்கு பாதுகாப்பான பணி சூழலை உறுதிப்படுத்த குழு அமைக்கப்படும். தமிழ்நாட்டில் உள்ள நூலகங்களுக்கு, வெளிப்படைத்தன்மையுடன் புத்தக கொள்முதல் செய்யப்படும். பள்ளி நூலகங்களில் என்னென்ன புத்தகங்கள் உள்ளன என அறிய EMIS இணையதளம் மூலம் தனிச்செயலி உருவாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.