பாலியல் வன்கொடுமை – த.வெ.க தலைவர் விஜய் கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்டது அதிர்ச்சி வேதனை அளிக்கிறது என த.வெ.க தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Tvk vijay

சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவி, சென்னை கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினார்கள்.

இதனையடுத்து, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஞானசேகரன் (37) என்பவரை ஏற்கனவே காவல்துறை கைது செய்து மற்றொரு நபரை தீவிரமாக தேடி வருகிறார்கள். இந்த சம்பவத்திற்கு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை என பலர் தங்கள் கடும் கண்டங்களை பதிவு செய்து வருகிறார்கள்.

அந்த வகையில், த.வெ.க தலைவர் விஜய் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தனது கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார். அதில் ” சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்கு உள்ளேயே, மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி இருக்கும் செய்தி, மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.

மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது செய்யப்பட்டிருப்பதாகக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தாலும் அவர் மீது விரைவான சட்ட நடவடிக்கை மேற்கொண்டு உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.  மேலும் இக்கொடூரக் குற்றத்தில் வேறு எவரேனும் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் மீதும் உரிய நடவடிக்கை விரைந்து எடுக்கப்பட வேண்டும்.

ஒவ்வோர் ஆண்டும் ஒதுக்கப்படும் நிர்பயா நிதியைப் பயன்படுத்தி, பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத இடங்களைக் கண்டறிந்து, அங்கு ஸ்மார்ட் கம்பங்கள் அமைத்தல், அவசர கால பட்டன்கள், சிசிடிவி கேமரா, தொலைபேசி உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்துதல், மாநகரப் பேருந்துகள் அனைத்திலும் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்தல், பொது இடங்களில் பெண்களுக்கான கழிப்பறை வசதிகள், பெண்கள் பாதுகாப்புக்கான அவசர காலத் தொலைபேசி மற்றும் கைப்பேசிச் செயலி வசதி உள்ளிட்டவற்றை ஏற்படுத்தி, கல்வி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், பொது இடங்கள் என அனைத்து இடங்களிலும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

இவை அனைத்தையும் ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இவை முழுமையாகச் செயல்படுகின்றனவா என்பதையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இவற்றைச் செய்வதில் எவ்விதச் சமரசத்திற்கும் உடன்படாமல் தகுந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

எவ்விதச் சூழலிலும் பெண்கள் மனவலிமையுடன் தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்வது தொடர்பாகப் போதிய சட்ட உதவி மற்றும் உளவியல் சார்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் அவசியம். இந்த விழிப்புணர்வை, பெண்களுக்கு அவர்கள் கல்வி பயிலும் காலக்கட்டத்திலேயே அரசு ஏற்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்” என காட்டத்துடன் விஜய் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்