கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை : “இக்கொடுரமானச் செயலுக்கு திமுக தான் பொறுப்பு” – இபிஎஸ் காட்டம்!

பெண்களுக்கு எங்குமே பாதுகாப்பு இல்லை என்ற நிலைக்கு தமிழ்நாட்டைத் தள்ளியதற்கு திமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

edappadi palanisamy mk stalin

கிருஷ்ணகிரி : மாவட்டத்தில் 8ம் வகுப்பு மாணவிக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக வெளியான அதிர்ச்சி தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அரசுப்பள்ளி ஆசிரியர்கள் ஆறுமுகம், சின்னசாமி, பிரகாஷ் ஆகியோர் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் எனவும், அவர்கள் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாகவும்  தகவல்கள் வெளியாகி வருகிறது.

இந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் இதற்கு கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது ” கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் 13 வயது சிறுமி, அரசுப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மூவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. “அரசுப்பள்ளி மற்றும் கல்லூரிகளிலேயே பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லை” என்று பெண் பாதுகாப்பு மீதான பொறுப்புடன் நான் சுட்டிக்காட்டிய போது, “எடப்பாடி பழனிசாமி பீதியைக் கிளப்புகிறார்” என்று சொன்ன  திமுக அரசின் அமைச்சர்கள், இப்போது என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?

அரசுப்பள்ளி மாணவிக்கு, தான் படிக்கும் பள்ளிகளிலேயே பாதுகாப்பு இல்லை என்பது வேலியே பயிரை மேய்கின்ற செயல், ஸ்டாலின் மாடல் திமுக அரசே இக்கொடுரமானச் செயலுக்கு முழு பொறுப்பேற்க வேண்டும்.  பெண்களுக்கு எங்குமே பாதுகாப்பு இல்லை என்ற நிலைக்கு தமிழ்நாட்டைத் தள்ளியதற்கு  திமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும்.

கொஞ்சமேனும் மனசாட்சி இருப்பின், பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளுக்கு பொறுப்பேற்று, பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்ய தனக்கு திராணியில்லை என்று பகிரங்கமாக அறிவித்து மு.க ஸ்டாலின்
மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்! போச்சம்பள்ளி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மூவர் மீதும் கடும் சட்ட நடவடிக்கை எடுத்து, உச்சபட்ச தண்டனை கிடைக்கப் பெறுவதை உறுதிசெய்ய வேண்டுமென திமுக அரசை வலியுறுத்துகிறேன்” எனவும் காட்டத்துடன் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்