குடிநீரில் கழிவுநீர்? 2 பேர் உயிரிழப்பு! அமைச்சர் தா.மோ.அன்பரசன் விளக்கம்!
குடிநீர், கழிவுநீர் குழாய்கள் இடையே எவ்வித கலப்பும் இன்றி முறையாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறதா? என்பதை அரசு உறுதிசெய்திருக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை : பல்லாவரம் அருகே கழிவுநீர் கலந்த நீரை குடித்ததாக கூறப்பட்டு 23 பேர் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடிநீரை அருந்திய அவர்கள் வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.
இந்த சூழலில், மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் பம்மல் பகுதியை சேர்ந்த திருவேதி (57) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. உண்மையில் குடிநீரில் கழிவு நீர் கலந்துள்ளாதா? என்பது பற்றிய தகவல் வெளியாகாமல் இருந்த நிலையில், அமைச்சர் தா.மோ.அன்பரசன் அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்டவர்களை நலம் விசாரிக்க சென்ற அமைச்சர் தா.மோ.அன்பரசன் நலம் விசாரித்தபிறகு “சென்னை பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீரில் கழிவுநீர் கலக்கவில்லை. கழிவுநீர் கலக்கப்பட்டிருந்தால் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டிருப்பர். உணவுப்பொருளில் கலப்படம் நிகழ்ந்ததாலேயே வாந்தி மயக்கம் ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உட்கொண்ட உணவில் ஏதேனும் பிரச்சினையா என விசாரணை நடத்தி வருகிறோம். குடிநீரில் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அந்த பகுதி முழுவதுமாக பாதிக்கப்பட்டிருக்கும் இன்னும் ஒரு மணி நேரத்தில் என்ன காரணம் என்பது தெரிந்துவிடும். சம்பந்தப்பட்ட இடத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர் மழைக்காலம் என்பதால் தினமும் தூய்மைப்படுத்தப்படும் பணி நடைபெற்று வருகிறது” எனவும் தெரிவித்தார்.
இந்த சம்பவத்திற்கு விளக்கம் கொடுத்து அவர் சென்ற அடுத்த சில மணி நேரங்களில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய மோகனரங்கா(46) என்பவர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதன் காரணமாக, மலைமேடு பகுதியில் கழிவுநீர் கலந்துவந்த குடிநீரை பருகியதால் பாதிப்பு என மக்கள் குற்றச்சாட்டி வருகிறார்கள்.
இந்த சூழலில், உயிரிழந்தவர் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளோருக்கு தக்க சிகிச்சை வழங்கி, அவர்கள் பூரண உடல்நலத்துடன் வீடு திரும்புபதை உறுதிசெய்து, தமிழ்நாடு முழுவதும் உடனடியாக சீரான, சுகாதாரமான குடிநீர் மக்களுக்கு வழங்கப்படுவதை உறுதிசெய்யுமாறு திரு. ஸ்டாலினின் திமுக அரசை வலியுறுத்துகிறேன் என எக்ஸ் வலைத்தள பக்கத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் வைத்துள்ளார்.
தாம்பரம் மாநகராட்சி 13-வது வார்டில் கழிவுநீர் கலந்த குடிநீரை அருந்தியதில்
3 நபர்கள் உயிரிழந்துள்ளதாகவும்,
30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.குடிநீர் என்பது மிக அடிப்படையான ஒன்று; அதனை மிகுந்த கவனத்துடன் விநியோகிக்க வேண்டியது…
— Edappadi K Palaniswami – Say No To Drugs & DMK (@EPSTamilNadu) December 5, 2024