தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு தனி வாரியம்.. தமிழக அரசு உத்தரவு..!
பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்களுக்காக தனியே ஒரு அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியத்தை அமைப்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அந்த அரசாணையில், உடலுழைப்புத் தொழிலாளர்கள் நலவாரியத்தின்கீழ், பட்டாசு மற்றும் தீப்பெட்டி தயாரிப்புத் தொழிலாளர்கள் தங்களது நல உதவிகளைப் பெற்று வருகின்றனர். இதில், சுமார் 4 லட்சம் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தயாரிப்புத் தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் வகையில், அவர்களுக்கென தனியே ஒரு நலவாரியம் அமைக்க வேண்டுமென பால்வளத்துறை அமைச்சரும், விருதுநகர் மாவட்ட பட்டாசு மற்றும் தீப்பெட்டி தயாரிப்புத் தொழில் அமைப்பைச் சேர்ந்தவர்களும் கோரிக்கை வைத்தனர்.
4 லட்சம் தொழிலாளர்களின் நலனைக் கருத்தில்கொண்டு, தமிழக அரசு பட்டாசு மற்றும் தீப்பெட்டி தயாரிப்புத் தொழிலாளர்களுக்கென தனியே ஒரு அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியத்தை அமைக்க அனுமதி வழங்கியுள்ளது. இன்றைய தேதியில் 1,250 பட்டாசு தொழிற்சாலைகளும், 870 தீப்பெட்டி தொழிற்சாலைகளும் உரிமம் பெற்று இயங்கி வருகின்றன.
இதில், ஏறத்தாழ 1 லட்சத்து 20 ஆயிரம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருவதாகத் கூறப்படுகிறது. இத்தொழிற்சாலைகளில் பணிபுரியும் அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களும் புதிய நலவாரியத்தில் உறுப்பினர்களாகச் சேர்ந்து பயன்பெறலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.