senthilbalaji: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி மனு தாக்கல்!
சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அமலாக்கத்துறை காவல் முடிந்து, தற்போது நீதிமன்ற காவலில் புழல் சிறையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தை நாடலாம் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் கோரும் மனுவை எந்த நீதிமன்றம் விசாரிப்பது என்பதில் பெரும் குழப்பம் ஏற்பட்டது.
அதாவது, ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை அவசர வழக்காக விசாரிக்க கோரி நீதிபதி அல்லி முன்பு செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர் இளங்கோ முறையிட்டனர். ஜாமீன் மனு மீதான விசாரணை விரைவில் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை, எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றமே விசாரிக்கும் என்று முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.
சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை விசாரிக்க கோரி அவரது தரப்பில் மீண்டும், சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் இன்று முறையீடு செய்யப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க அதிகாரம் உள்ளதா? என்பது குறித்து முடிவெடுக்க நீதிபதி ரவி அறிவுறுத்தினார். உயர்நீதிமன்ற உத்தரவு இல்லாமல் தன்னால் விசாரிக்க முடியாது எனவும் நீதிபதி ரவி கருத்து தெரிவித்தார். இதனால் ஜாமீன் மனு விசாரணை மீது குழப்பம் நீடித்து வந்தது.
இதனைத்தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றத்தை நாடிய நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்கும் என உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவு மூலம் ஜாமீன் மனுவை யார் விசாரிப்பது என்று குழப்பத்துக்கு தீர்வு கிடைத்தது. இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவை அடுத்து ஜாமீன் மனுதாக்கல் செய்துள்ளதாக முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அலியிடம் முறையிட்டு உள்ளனர். முறையீட்டை ஏற்று நீதிபதி அல்லி மனுதாக்கல் செய்ய அனுமதி அளித்தார்.