தாமதமான வழக்குப்பதிவு.. சட்டத்தை மீறி கைது.! செந்தில் பாலாஜி வழக்கறிஞர் நீதிமன்றத்தில் காரசார வாதம்.!
அமலாக்கத்துறையினர் தாமதமாக வழக்குப்பதிவு செய்ததாவும், சட்டத்தை மீறி கைது செய்யப்பட்டதாகவும் செந்தில் பாலாஜி வழக்கறிஞர் உயர்நீதிமன்றத்தில் வாதிட்டார்.
கடந்த வாரம்தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டு பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக முதலில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் காவேரி மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இதற்கிடையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்த காரணத்தை கூறாமல் கைது செய்துவிட்டனர் என கூறி செந்தில் பாலாஜி மனைவி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த வழக்கு மீதான விசாரணை இன்று நீதிபதி அமர்வு முன்னர் விசாரணைக்கு வந்தது.
அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வாதாடினார். அவர் கூறுகையில் , இந்த வழக்கானது தாமதமாக பதியப்பட்டுள்ளது. கடந்த 2014/2015 காலகட்டத்தில் நடந்த சம்பவத்திற்கு திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றம் உத்தரவின் பெயரில் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்ததாக கூறுகிறது. ஆனால் சட்ட விதிகளுக்கு அப்பாற்பட்டு இந்த கைது நடவடிக்கை நடைபெற்றுள்ளது. எதற்காக இந்த கைது என்ற காரணத்தை அமலாக்கத்துறை கூறவே இல்லை. உச்சநீதிமன்ற விதி 41ஏ விதிப்படி எதற்காக கைது என்பதை கைது செய்யப்படுவோரிடம் கூற வேண்டும். அமலாக்கத்துறை 5 முறை சம்மன் அனுப்பியுள்ளது. அதில் 4 முறை செந்தில் பாலாஜியின் ஆடிட்டர் ஆஜராகியுள்ளார். ஒரு முறை செந்தில் பாலாஜி நேரடியாக ஆஜராகியுள்ளார் அப்படி இருக்கும் போது கைது நடவடிக்கை அவசியமா என வாதிட்டார்.
மேலும், கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட ஜூன் 13ஆம் தேதி இரவு 11 மணி முதல் 1.30 வரை என்ன நடந்தது என அமலாக்கத்துறையினர் கூறவேண்டும். அன்று செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு அவர்கள் தான் ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். பின்னர் அவர்களே நம்ப மறுக்கின்றனர் என செந்தில்பாலாஜி தரப்பு மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ நீதிமன்றத்தில் வாதாடினார்.