செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை!
சட்டவிரோத பண பரிவர்த்தனை புகாரின் பெயரில் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஜூன் 14ம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தது. இதன்பிறகு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த செந்தில் பாலாஜியை, அமலாக்கத்துறை 5 நாட்கள் காவலில் எடுத்து அவரிடம் விசாரணை மேற்கொண்டது.
அமலாக்கத்துறை காவல் முடிந்து மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட செந்தில் பாலாஜி, தற்போது புழல் சிறையில் இருந்து வருகிறார். இதனிடையே, செந்தில் பாலாஜிக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொண்டு, அதற்கு சிகிச்சையும் பெற்று வருகிறார். புழல் சிறையில் நீதிமன்ற காவலில் உள்ள செந்தில் பாலாஜி, உடல்நிலையை காரணம் காட்டி ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் இரண்டு முறை ஜாமீன் மனுக்களை தாக்கல் செய்திருந்தார்.
‘நாகலாந்து மக்கள் நாய்க்கறி உண்ணுகின்றனர்’ – ஆளுநரின் கண்டனத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில்…!
ஆனால், செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மருத்துவ காரணங்கள் கூறி ஜாமீன் வழங்க முடியாது என நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர். ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து, உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு செந்தில் பாலாஜி தரப்பு முறையீடு செய்து இருந்தது.
இந்த மனு மீதான விசாரணை கடந்த சில நாட்களுக்கு முன்பு உச்சநீதிமன்றத்தில் வந்தது. அப்போது விசாரணையை இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் அனிருதா போஸ், பெல்லா எம்.திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னர் விசாரணைக்கு வருகிறது.