செந்தில் பாலாஜி ஜாமின் மனு நாளை ஒத்திவைப்பு..!
அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜி விலகி விட்டதால் அவருக்கு ஜாமின் வழங்க வேண்டும் என ஜாமின் மனு விசாரணையில் மூத்த வழக்கறிஞர் அரியமா சுந்தரம் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு ஜூன் 14-ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்தனர். தற்போது புழல் சிறையில் உள்ளார். 8 மாதங்களாக சிறையில் உள்ள செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக இருந்து வந்த நிலையில் நேற்று முன்தினம் தனது அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்தார்.
தனது ராஜினாமா கடிதத்தை செந்தில் பாலாஜி முதல்வருக்கு அனுப்பி வைத்தார். பின்னர் அந்த ராஜினாமா கடிதத்தை முதல்வர் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பிவைத்தார். இதையெடுத்து செந்தில் பாலாஜி ராஜினாமா கடிதத்திற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கினார். இந்நிலையில், இன்று செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரியமா சுந்தரம்” அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜி விலகிவிட்டதால் அவருக்கு ஜாமின் வழங்க வேண்டும். அமைச்சராக இருப்பதால் சாட்சிகளை கலைத்துவிடுவார் என்ற அமலாக்கத்துறையின் வாதம் தற்போது செல்லாததாகிவிட்டது. வழக்கு தொடர்பான புலனாய்வு நிறைவடைந்துவிட்டதாகவும், அனைத்து ஆதாரங்களையும் தாக்கல் செய்துவிட்டதாகவும் அமலாக்கத்துறை கூறிவிட்டது.
பாஜகவின் அத்தனை பாவங்களுக்கும் அதிமுக உடந்தை… முதலமைச்சர் ஸ்டாலின்!
வழக்கில் தொடர்புடைய யாரும் யாருடைய வீட்டிற்கு நேரில் சென்று மிரட்டல் விடுப்பதில்லை, மறைமுகமாக ஒருவருக்கு அச்சுறுத்தல் விடுப்பதாக இருந்தால் சிறையில் இருந்தும் கூட ஒருவரால் அச்சுறுத்த முடியும், அமலாக்கபிரிவு முன்வைத்த அனைத்து வாதங்களும் செல்லாதவை ஆகிவிட்டன. 270 நாளுக்காக சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க வேண்டும்.
செந்தில் பாலாஜியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பென் டிரைவ் ஹார்டு டிஸ்க்கில் இருந்த ஃபைல்களை அனைத்து ஆதாரங்களையும் அமலாக்கத்துறை திருத்தி உள்ளதாக குற்றம் சாட்டினார். அமலாக்கத்துறை தாக்கல் செய்த ஆவணங்களை கடுமையான ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். தற்போதைய நிலையில் திருத்தப்படாத ஆதாரங்களை கொண்டு தங்கள் தரப்பில் வாதிட அமலாக்கத்துறை வழியில்லை.
தற்போது அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள ஆதாரங்களைக் கொண்டு விசாரணை நடத்தினால் செந்தில் பாலாஜியை விடுவித்தாக வேண்டும்” என வாதிட்டார். அமலாக்கத்துறையின் வாதங்களை கேட்க செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீதான விசாரணை நாளை பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டது.