கூடுகிறது சட்டப்பேரவை…எரிசக்தித்துறை, மதுவிலக்கு குறித்து முக்கிய அறிவிப்பு வெளியிடும் செந்தில் பாலாஜி!
மக்களுக்கு மின் கட்டண உயர்வு இல்லாமல் மின்சாரம் வழங்குவது குறித்து இன்று சட்டப்பேரவையில் கேள்விகள் எழுப்பப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை : கடந்த மாதம் 14-ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் பொது பட்ஜெட்டும், 15ம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து, 17ம் தேதி முதல் இரு பட்ஜெட்டுகள் மீதான விவாதம் சட்டப்பேரவையில் நடைபெற்றது. இதனையடுத்து, 24ம் தேதி முதல் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, புனித வெள்ளியையொட்டி கடந்த 18ம் தேதி அரசு விடுமுறை என்பதால், சட்டப்பேரவை கூடவில்லை. தொடர்ந்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் சட்டப்பேரவைக்கும் விடுமுறை விடப்பட்டது. விடுமுறையை தொடர்ந்து 3 நாட்களுக்கு பிறகு நேற்று மீண்டும் சட்டப்பேரவை கூடியது.
நேற்று கூடிய நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அதற்கு அந்த துறையை சேர்ந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்து பேசினார். அதனைத்தொடர்ந்து இன்று, சட்டசபையில் இன்று, எரிசக்தித்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடக்க உள்ளது.
தமிழ்நாட்டில் மின்சார தேவை வேகமாக அதிகரித்து வருகிறது. இதைப் பூர்த்தி செய்ய மாநில அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து கேள்விகள் எழலாம். அதைபோல், சூரிய, காற்றாலை மின்சார உற்பத்தியை அதிகரிக்கும் திட்டங்கள் பற்றி விவாதிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. விவாதத்திற்கு பதில் அளித்து, அமைச்சர் செந்தில் பாலாஜி, தன் துறையின் முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார்.