மாட்டு வண்டியில் மணல் அள்ளும் விவகாரம் – கமலுக்கு செந்தில் பாலாஜி பதிலடி
மணல் மாட்டுவண்டி உரிமையாளர்களின் பிரச்சனையின் ஆழம் தெரியாமல் கமல்ஹாசன் பேசுவதாக திமுக வேட்பாளர் செந்தி பாலாஜி குற்றசாட்டியுள்ளார்.
சமீபத்தில் கரூர் தொகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட அத்தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, திமுக வெற்றி பெற்று ஆட்சி வந்தவுடன் அடுத்த நொடியே மாட்டுவண்டி உரிமையாளர்கள் மணல் அள்ளலாம். அதை அதிகாரிகள் யாரும் தடுக்க மாட்டார்கள். அப்படி தடுக்கும் அதிகாரிகள், இங்கே பணியாற்றமாட்டார்கள் என்று அவர் கூறியது சர்ச்சையானது.
பின்னர் செந்தி பாலாஜிக்கு எதிராக அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து செந்தி பாலாஜிக்கு எதிராக ட்விட்டரில் பதிவிட்ட ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன், தேர்தலில் வென்ற மறு நிமிடம் ஆற்று மணல் கொள்ளையைத் துவங்கி விடுவோம் என்கிறார் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி. எங்கள் பெருந்துறை வேட்பாளர் நந்தகுமார் மணல் கொள்ளையை எதிர்த்து நீதிமன்றம் சென்று வாதாடி வென்றவர் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பதில் கருத்து தெரிவித்த செந்தில் பாலாஜி, மணல் மாட்டுவண்டி உரிமையாளர்களின் பிரச்சனையின் ஆழம் தெரியாமல் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசுகிறார். மக்கள் நீதி மய்யத்தில் போட்டியிட கூடிய வேட்பாளர் கரூர் தொகுதியில் மாட்டுவண்டி உரிமையாளர்களுக்கு ஆதரவா? எதிர்ப்பா என்று அவர் தெரியப்படுத்த வேண்டும். நாங்கள் மாட்டுவண்டியில் மணல் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டோம் என்று அந்த வேட்பாளர் சொல்ல வேண்டும் என தெரிவித்துள்ளார்.