அமலாக்கத்துறை விசாரணையில் செந்தில் பாலாஜி.! முதல் நாள் 2 மணிநேரம்.. 2வது நாள் விசாரணை துவக்கம்.!
சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விசாரணை மேற்கொள்ள, ஐந்து நாள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ள அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இந்த அனுமதியை தொடர்ந்து, நேற்று புழல் சிறையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துவரப்பட்டார். அங்கு அவரிடம் இரண்டு மணி நேரம் விசாரணை நடைபெற்றது.
நேற்று இரவு நடைபெற்ற இந்த விசாரணையை தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக இன்று காலை 9 மணிக்கு நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை விசாரணையை தொடங்கியுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் கேட்பதற்கு 200 கேள்விகள் தயார் நிலையில் இருப்பதாகவும், தினமும் 50 கேள்விகள் வீதம் கேள்விகள் கேட்கப்பட உள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடைபெறுவதால் நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் உள்ள சாஸ்திரி பவன் வளாகத்தில் மத்திய பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.