மூச்சுவிடுவதில் சிரமம்.? செந்தில் பாலாஜி உடல்நிலையின் தற்போதைய நிலவரம்…
சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது 2013ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி செய்ததாக கூறி வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கில் சட்ட விரோத பண பரிவர்த்தனை நடைபெற்றதாக கூறி அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து, கடந்தாண்டு ஆண்டு ஜூன் மாதம் செந்தில் பாலாஜியை கைது செய்தனர்.
கைது நடவடிக்கைகளின் போது, செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்ட காரணத்தால் அப்போது அவருக்கு தனியார் மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சை முடிந்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார் செந்தில் பாலாஜி.
இதற்கிடையில், இந்த வழக்கில் இருந்து ஜாமீன் கேட்டு தொடர்ந்து உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என வழக்கு நடைபெற்று வருகிறது. அதே போல, அமலாக்கத்துறை கைதுக்கு எதிரான வழக்கு சென்னை சிறப்பு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. செந்தில் பாலாஜிமீது பதியப்பட்ட வழக்கின் விசாரணை இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.
இதற்கிடையில், நேற்று பிற்பகல் புழல் சிறையில் இருந்த செந்தில் பாலாஜிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அதனை தொடர்ந்தும் உடல்நிலை சீராகாத காரணத்தால் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு நேற்று மாற்றம் செய்யப்பட்டார்.
தற்போது செந்தில் பாலாஜிக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால், செந்தில் பாலாஜி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு இசிஜி உள்ளிட்ட சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், தற்போது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதாகவும், இன்னும் சற்று நேரத்தில் இதய சிகிச்சை நிபுணர் செந்தில் பாலாஜி உடல்நிலை குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளார் என்றும் கூறப்படுகிறது.
இப்படியான சூழலில் இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி நேரில் ஆஜராகுவாரா, அவருக்கு மருத்துவ காரணங்கள் காரணமாக இடைக்கால நிவாரணம் கிடைக்குமா என்பது இன்றைய நீதிமன்ற விசாரணையில் தெரியவரும்.