செந்தில் பாலாஜிக்கு விடுதலை உறுதி.! பிணை உத்தரவாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி.!
செந்தில் பாலாஜி ஜாமீனுக்கான பிணை உத்தரவாதங்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் ஏற்றுக்கொண்டார்.
சென்னை : சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் இன்று நிபந்தனை ஜாமீன் வழங்கியது. ரூ.25 லட்சத்திற்கு 2 நபர்கள் பிணை உத்தரவாதம் வழங்க வேண்டும் என்றும், வழக்கிற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் நிபந்தனைகள் விதித்து ஜாமீன் வழங்ப்பட்டது.
இதனை அடுத்து அமலாக்கத்துறை வழக்கு நடைபெற்று வரும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி கார்த்திகேயன் முன்பு விசாரணை நடைபெற்றது. அப்போது, நீதிபதி முதலில் , “உச்சநீதிமன்ற தீர்ப்பில் குழப்பங்கள் உள்ளது. பிணை உத்தரவாதங்களை அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் அளிக்க வேண்டும்” என கூறினார்.
இதற்கு செந்தில் பாலாஜி தரப்பு மறுப்பு தெரிவித்து வாதிட்டது . பிணை உத்தரவாதங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து தான் வழக்கம் என வாதிட்டனர். இதனை தொடர்ந்து நீண்டவாதத்திற்கு பிறகு, பிணை உத்தரவாதங்களை நீதிபதி கார்த்திகேயன் ஏற்றுக்கொண்டார். மேலும், இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் அளிப்பதற்கு தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்று அமலாக்கத்துறை கூறியது.
இதனை அடுத்து, செந்தில் பாலாஜி உறவினர்கள் தியாகராஜன், சிவப்பிரகாசம் ஆகியோர் ரூ.25 லட்சத்திற்கான பிணை உத்தரவை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். இந்த பிணை உத்தரவாதங்களை நீதிபதி கார்த்திகேயன் ஏற்றுக்கொண்டார். மேலும், செந்தில் பாலாஜியை புழல் சிறையில் இருந்து விடுவிக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.