மூன்றாவது நீதிபதி முன்பு செந்தில் பாலாஜி வழக்கு விசாரணை தொடங்கியது!
அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி மேகலா தாக்கல் செய்த, ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை தொடங்கியது.
செந்தில் பாலாஜி கைது எதிர்த்து அவரது மனைவி மேகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் இரு மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர். அதாவது, கைது நடவடிக்கை சட்டவிரோதம் என்றும் ஆட்கொணர்வு விசாரணைக்கு உகந்ததல்ல எனவும் இரு மாறுபட்ட தீர்ப்பு வழங்கினர்.
செந்தில் பாலாஜி வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால் மூன்றாவது நீதிபதிக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தனர். இதன்பின், ஆட்கொணர்வு மனு மீது விசாரணை நடத்த 3வது நீதிபதியாக சி.வி கார்த்திகேயன் நியமனம் செய்யப்பட்டார். இதன்பின் அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான வழக்கு விசாரணை இன்று, நாளை நடத்தப்படும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற மூன்றாவது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் அறிவித்திருந்தார்.
அதன்படி, இன்று செந்தில் பாலாஜி தரப்பு வாதங்களை முன்வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதுபோன்று நாளை அமலாக்கத்துறை தரப்பில் வழக்கறிஞர் துஷார் மேத்தா ஆஜராகி வாதாடுகிறார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி மேகலா தாக்கல் செய்த, ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.
அப்போது, செந்தில் பாலாஜி தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டு வருகிறது. செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபில், என்ஆர் இளங்கோ ஆஜராகி வாதம் வைத்து வருகின்றனர். குற்றம் புரிந்ததன் மூலம் பெற்ற பணத்தை வைத்ததாகவோ, மறைத்ததாகவோ எந்த ஆதாரமும் இல்லை, குற்றம் செய்ததற்கான அனைத்து ஆதாரங்களும் இருந்தால் மட்டுமே கைது செய்ய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என செந்தில் பாலாஜி தரப்பில் வாதம் வைக்கப்பட்டு வருகிறது.