செந்தில் பாலாஜி விவகாரம்: ஐகோர்ட் தீர்ப்பு! உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை கேவியட் மனு தாக்கல்!

செந்தில் பாலாஜி விவகாரத்தில், அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் நேற்றைய தீர்ப்பு தொடர்பாக, கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவின்படி, ஜூன் 13-ஆம் தேதி செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இதன்பின், சட்ட விரோத பணபரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் ஜூன் 14-ஆம் தேதி அதிகாலை அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அப்போது, பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் சென்னையில் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதய குழாய்களில் அடைப்புகள் இருப்பதால் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். இதன்பின், காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு செந்தில் பாலாஜிக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளபட்டு தற்போது, சிசிக்சை பெற்று வருகிறது.
இதனிடையே, செந்தில் பாலாஜியின் கைதை எதிர்த்து, அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி அமர்வு விசாரித்தது. அப்போது, இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால், மூன்றாவது நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
இதில், செந்தில் பாலாஜி கைது சட்டவிரோதம் என நீதிபதி நிஷா பானுவும், இந்த மனு விசாரணைக்கு ஏற்றதல்ல என நீதிபதி பரத சக்கரவர்த்தியும் தீர்ப்பு வழங்கினர். மாறுபட்ட தீர்ப்பால், ஆட்கொணர்வு வழக்கை 3வது நீதிபதி விசாரணைக்காக தலைமை நீதிபதியிடம் அனுப்பி வைக்கப்பட்டது. அதன்படி, செந்தில் பாலாஜி வழக்கில் மூன்றாவது நீதிபதியாக சிவி கார்த்திகேயன் நியமிக்கப்பட்டார்.
இதனிடையே, செந்தில் பாலாஜி விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது, ஆட்கொணர்வு மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்புக்கு பிறகே அமலாக்கத்துறை மனு விசாரிக்கப்பட்டு, தீர்ப்பு வழங்கப்படும் எனவும் உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்திருந்தது.
ஆகையால், இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை அடுத்து, ஆட்க்கொணர்வு மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற மூன்றாவது நீதிபதி சிவி கார்த்திகேயன் முன்பு 11 மற்றும் 12 தேதிகளில் நடைபெற்றது. இரண்டு நாள் விசாரணையில், செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், அமலாக்கத்துறை தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி வாதங்களை முன்வைத்தனர்.
இதில் குற்றம் மூலம் பெற்ற பணத்தை வைத்திருப்பதாகவோ, அதை மறைத்திருப்பதாகவோ எந்த ஆதாரங்களும் இல்லை. ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே அமலாக்கத் துறையினரால் கைது செய்ய முடியும் என செந்தில் பாலாஜி தரப்பில் வாதம் வைக்க, செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதாக இரு நீதிபதிகளும் கூறவில்லை. கைது நடவடிக்கை சரியானது தானா என்பதை அறிந்து கொள்ள சம்பந்தப்பட்ட நபரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளது என அமலாக்கத்துறை தரப்பில் கூறப்பட்டது.
இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த பிறகு, நேற்று மீண்டும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, இரு தரப்பிடமும் மூன்றாவது நாள் வாதங்கள் கேட்ட பின், நீதிபதி சிவி கார்த்திகேயன் தீர்ப்பளித்தார். அதாவது, 3வது நீதிபதி கூறுகையில், அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத் துறை காவலில் எடுத்து விசாரிக்க அதிகாரம் உள்ளது. நீதிமன்றத்தில் புகார் தாக்கல் செய்யும் வரை புலன் விசாரணை தொடரலாம்.கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைக்கு தடை கோர முடியாது.
கைது செய்ய அதிகாரம் உள்ளது என்றால் காவலில் எடுத்து விசாரிப்பதும் அனுமதிக்கத்தக்கது. முதல் 15 நாட்களுக்கு பிறகு அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்கலாம். மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற காலத்தை நீதிமன்ற காவல் காலமாகக் கருத முடியாது. சிகிச்சைக்கு பிறகு செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்கலாம். செந்தில் பாலாஜி கைதும், நீதிமன்ற காவலும் சட்டப்பூர்வமானது. செந்தில்பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு ஏற்கத்தக்கதல்ல. செந்தில் பாலாஜி சட்டத்துக்கு உட்பட்டவர் தான் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் அமலாக்கத்துறை அதிகாரம் தொடர்பான நீதிபதி பரத சக்கரவர்த்தியின் தீர்ப்பில் உடன்படுகிறேன் எனவும் தீர்ப்பளித்திருந்தார்.
தீர்ப்பை எதிர்த்து செந்தில்பாலாஜியின் மனைவி மேகலா மேல்முறையீடு மனு தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கபடுகிறது. இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேலும் ஒரு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. தங்களது தரப்பு கருத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்க கூடாது என மனுவில் வலியுத்தியுள்ளது. ஆட்கொணர்வு மனு மீது சென்னை ஐகோர்ட் நேற்று தீர்ப்பு வழங்கிய நிலையில், கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜியின் கைது சட்டப்படியானது, நீதிமன்ற காவல் சட்டப்படியானது என சென்னை ஐகோர்ட் மூன்றாவது நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார் என கூறப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பத்ம பூஷன் விருதைப் பெற்றார் அஜித்குமார்!
April 28, 2025
மீண்டும் அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார் மனோ தங்கராஜ்..!
April 28, 2025