புழல் சிறையில் இருந்து வெளியில் வந்தார் செந்தில் பாலாஜி.! தொண்டர்கள் உற்சாக வரவேற்பு.!
உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை அடுத்து செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருந்து தற்போது வெளியில் வந்தார். அவரை திமுக தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
சென்னை : 471 நாட்கள் புழல் சிறையில் இருந்த செந்தில் பாலாஜிக்கு இன்று உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கடந்த 2023 ஜூன் மாதம் அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டிருந்தார்.
இதனையடுத்து, இந்த வழக்கில் இருந்து ஜாமீன் கேட்டு, செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு விண்ணப்பித்திருந்தார். ஆனால், அந்த ஜாமீன் விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்படவே , அதன் பின்னர் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு செந்தில் பாலாஜி விண்ணப்பித்து இருந்தார்.
இந்த வழக்கு விசாரணை அனைத்தும் முடிந்து, இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பில், ரூ.25 லட்சத்திற்கு 2 பேர் பிணை அளிக்க வேண்டும், வாரத்தில் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை அன்று அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு சென்று கையெழுத்திட வேண்டும், சாட்சியங்களை கலைக்க கூடாது உள்ளிட்ட நிபந்தனைகள் விதித்து உச்சநீதிமன்றம் ஜாமீன் உத்தரவை பிறப்பித்தது.
இதனைத் தொடர்ந்து, அமலாக்க துறை வழக்கு நடைபெற்று வரும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி கார்த்திகேயன் முன்னிலையில், இன்று விசாரணை நடைபெற்றது. முதலில், உச்ச நீதிமன்ற ஜாமின் உத்தரவில் குழப்பங்கள் இருக்கிறது என்று பிணை உத்தரவாதங்களை நீதிபதி ஏற்க மறுத்தார்.
அதன் பிறகு, செந்தில் பாலாஜி தரப்பு வாதங்களை ஏற்று அவரது உறவினர் தியாகராஜன் மற்றும் சிவப்பிரகாசம் ஆகியோர், 25 லட்சத்திற்கான பிணைத்தொகையை செலுத்தினார். இந்தப் பிணை உத்தரவை ஏற்றுக்கொண்ட நீதிபதி, செந்தில் பாலாஜியை விடுதலை செய்வதற்கான ஆணையை பிறப்பித்தார்.
சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற உத்தரவின் அடுத்து, புழல் சிறையில் இருந்த செந்தில் பாலாஜி தற்போது விடுவிக்கப்பட்டார். இதனையடுத்து, சிறை வாசலில் திரண்டிருந்த திமுக தொண்டர்கள் 471 நாட்கள் சிறையில் இருந்து வெளியில் வந்த செந்தில் பாலாஜியை பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் உற்சாகமாக வரவேற்றனர்.