செந்தில் பாலாஜி ஜாமீன் மனு – அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!
சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 2023 ஜூன் 14-ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதன்பிறகு, அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 5 நாட்கள் விசாரணை மேற்கொண்டனர். அமலாக்கத்துறை காவல் முடிந்த நிலையில், இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, அதன்நகலும் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்களை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றமும், சென்னை உயர்நீதிமன்றமும் தள்ளுபடி செய்த நிலையில், சென்னை புழல் சிறையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்து 17வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டு சிறையில் உள்ளார்.
ஸ்பெயின் நிறுவனங்கள் தமிழ்நாட்டை நோக்கி வர வேண்டும்- முதலமைச்சர் உரை..!
இந்த சூழலில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி 2-வது முறையாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு அந்த மனு இன்று விசாரணைக்கு வருவதாக கூறப்பட்டது. இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி இரண்டாவது முறையாக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை ஐகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு வந்தது.
அப்போது, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தொடர்பாக அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை பிப்.14ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே, நீதிபதி கூறியதாவது, கடைநிலை அரசு ஊழியர் கைதானால் 48 மணிநேரத்தில் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்.
ஆனால், இதேபோல் கைது செய்யப்பட்டவர் 230 நாட்களாக அமைச்சராக நீடிக்கிறார். எனவே, 230 நாட்களுக்கும் மேல் சிறையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி இன்னும் பதவியில் நீடிப்பதன் மூலம் என்ன கருத்தை சமூகத்துக்கு சொல்ல நினைக்கிறீர்கள் என கேள்வி எழுப்பிய நீதிபதி, சட்டம் அனைவருக்கும் சமமானதாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.