செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை எதிர்ப்பு! 3 மனுக்கள் மீதான தீர்ப்பு நாளை ஒத்திவைப்பு!
செந்தில் பாலாஜி கைது தொடர்பான 3 மனுக்கள் மீதும் தீர்ப்பு நாளை ஒத்திவைத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்.
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, நெஞ்சுவலி காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது, அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொண்டனர். அதில், ரத்தக்குழாய்களில் 3 அடைப்புகள் இருப்பது தெரியவந்தது. இதன்பின் ஓமந்தூரார் மற்றும் இஎஸ்ஐ மருத்துவர்கள், செந்தில் பாலாஜிக்கு இதய அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைத்தனர்.
இதனால், செந்தில் பாலாஜி, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இந்த சமயத்தில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தினார். இஅப்போது, செந்தில் பாலாஜிக்கு 28-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்தார். அப்போதே, செந்தில் பாலாஜியின் கைது நடவடிக்கையை நிராகரிக்க வேண்டும் என்றும், உடல்நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தனித்தனியே திமுக சார்பில் 3 மனுக்கள் தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 3 மனுக்கள் மீதான விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் என்ஆர் இளங்கோ நேரில் ஆஜராகி வாதங்களை முன்வைத்தார். அப்போது அவர் கூறுகையில், செந்தில் பாலாஜி கருத்தில் கொண்டு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும். செந்தில் பாலாஜியின் இதயத்தில் 3 அடைப்புகள் உள்ளன. பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். மனிதாபிமானமற்ற முறையில் இஎஸ்ஐ மருத்துவர்களை வைத்தும் அமலாக்கத்துறை பரிசோதனை செய்துள்ளது.
அமலாக்கத்துறையின் விசாரணையின்போது, செந்தில் பாலாஜி துன்புறுத்தப்பட்டார், அவரின் உயிருக்கு ஆபத்து உள்ளது. சிகிச்சைக்காக செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என வாதம் வைக்கப்பட்டது. மேலும், கைதுக்கு முன் நோட்டீஸ் அனுப்ப வேண்டும். கைது குறித்து குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கவில்லை. கைதுக்கான காரணங்களை செந்தில் பாலாஜியிடமும் தெரிவிக்கவில்லை எனவும் புகார் தெரிவித்தனர்.
இதன்பின் அமலாக்கத்துறை சார்பில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏஆர்எஸ் சுந்தரேஷ் வாதம் முன்வைத்தார். அவர் கூறுகையில், செந்தில் பாலாஜி கைது நடவடிக்கையில் அனைத்து சட்ட விதிகளும் பின்பற்றப்பட்டன. செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கேட்கலாம், ரிமாண்ட் செய்யப்பட்டு விட்ட நிலையில், அதை நிராகரிக்க கோர முடியாது. சட்டவிரோத பணபரிவர்த்தனையில் நோட்டீஸ் தர வேண்டும் குற்றவியல் நடைமுறை சட்டம் பொருந்தாது. எதற்காக கைது செய்கிறோம் என்ற காரணத்தை தெரிவித்தோம், சம்மன் அளித்தோம் என்றார்.
மேலும், கைது மெமோ அளிக்கப்பட்டபோது அதை பெற செந்தில் பாலாஜி மறுத்தார். நீதிமன்றம் காவல் வழங்கப்பட்டுள்ள நிலையில், அதை நிராகரிக்க கோர முடியாது. செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை அளிப்பதற்கான மருத்துவ குழுவை நீதிமன்றமே நியமிக்க வேண்டும் என அமலாக்கத்துறை சார்பில் வாதம் வைக்கப்பட்டது. எனவே, செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்தது.
அவருக்கு தேவையான சிகிச்சைகள் அனைத்தும் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதன்பின், செந்தில் பாலாஜி கைது தொடர்பான 3 மனுக்கள் மீதான தீர்ப்பை நாளை ஒத்திவைத்தது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம். அதாவது, அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான கைது நடவடிக்கையை நிராகரிக்கக் கோரியும், அவரை உடனடியாக ஜாமீனில் விடுவிக்கக் கோரியும், அவரை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அனுமதிக்குமாறும் திமுக தரப்பில் தாக்கல் செய்த 3 மனுக்கள் மீதான உத்தரவும் நாளை ஒத்திவைக்கப்பட்டது.
இந்த மனுக்கள் தொடர்பாக செந்தில் பாலாஜி தரப்பு, அமலாக்கத்துறை தரப்பு வாதம் முடிந்த நிலையில், தீர்ப்பு நாளை ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்ற நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி, காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு மீதும் நாளை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.