அதிமுக வெளிநடப்பு.. சிங்கிளாக பேட்ஜை கழற்றிவைத்துவிட்டு பேசிய செங்கோட்டையன்.!
அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்த நிலையில் செங்கோட்டையன் மட்டும் சட்டப்பேரவையில் உரையாற்றினார்

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் நடைபெற்று வருகிறது. இதில், எம்எல்ஏக்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.
அந்த வகையில், டாஸ்மாக் ஊழல் புகாரில் சிக்கிய ‘தியாகி யார்’ என்ற பேட்ஜை அதிமுகவினர் அணிந்து வந்தனர். இதுகுறித்து பேரவையில் முதல்வர் ஸ்டாலின், “நொந்து நூடுல்ஸாகிப்போன அதிமுக தொண்டர்கள்தான் தியாகி… முதல்வர் பதவிக்காக காலில் விழுந்ததும் ஏமாந்தாரே அந்த அம்மையார்தான் தியாகி” என்று பதிலடி கொடுத்தார். மேலும், அதிமுகவினர் தாம் சிக்கியுள்ள பல்வேறு வழக்குகளில் இருந்து தப்பிக்க காலில் விழுந்துள்ளனர் எனவும் சாட்டியுள்ளார்.
டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல் விவகாரம் குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதாக சட்டப்பேரவையில் அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டுள்ளனர். நீதிமன்றத்தில் இருக்கும் விவகாரம் குறித்து பேரவையில் பேச அனுமதிக்க முடியாது என சபாநாயகர் கூறினார். இதற்கு எதிர்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்கள், ‘யார் அந்த தியாகி?’ என்று முழக்கம் எழுப்பினர்
இபிஎஸ் சஸ்பெண்ட்
டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி ஊழல் விவகாரம் குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து, சட்டபேரவையில் இபிஎஸ் உட்பட அதிமுக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து சட்டப்பேரவையில் இருந்த அக்கட்சியின் எம்.எல்.ஏக்களை இன்று ஒருநாள் மட்டும் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். மேலும், யார் அந்த தியாகி என்ற பதாகைகளை காட்டிய அவர்களை உடனே வெளியேற்ற அவைக் காவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
தனியாக உரையாற்றிய செங்கோட்டையன்
டாஸ்மாக் ஊழல் தொடர்பாக பேச அனுமதிக்கவில்லை என அதிமுகவினர் பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தபோது,
அவர்களுடன் சேர்ந்து சென்ற ஒருசில நொடிகளில் மீண்டும் அவைக்குள் திரும்பினார் செங்கோட்டையன். பேட்ஜை அகற்ற சபாநாயகர் உத்தரவிட்டதால், பேட்ஜை கழற்றி வைத்துவிட்டு செங்கோட்டையன் பேசினார். தன் தொகுதி சார்ந்த கவனயீர்ப்பு குறித்து பேச வேண்டும் என்பதால் செங்கோட்டையன் மட்டும் உரையாற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மற்ற உறுப்பினர்கள் வெளியேறிய நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் குறித்து பேசி முடித்த பின் அவையை விட்டு வெளியேறினார். முன்னதாக அனைவரும் பதாகையை ஏந்திய போது, செங்கோட்டையன் தன்னிடம் கொடுக்கப்பட்ட பதாகையை வாங்கவும் மறுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.