இபிஎஸ் தலைமையில் மா.செ கூட்டம்.! முதல் வரிசையில் செங்கோட்டையன்!
இன்று இபிஎஸ் தலைமையில் நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டார்.

சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைப்பெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிறுத்தி அதிமுகவில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகள் பற்றி இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், செல்லூர் ராஜு, விஜயபாஸ்கர், சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி, தங்கமணி, வேலுமணி என பலர் கலந்து கொண்டனர்.
இதில் முக்கிய நபராக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டது பலரது கவனத்தையும் ஈர்த்தது. அண்மையில் எடப்பாடி பழனிச்சாமி வீட்டில் நடந்த விருந்து நிகழ்ச்சி, அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் உள்ளிட்டவற்றை புறக்கணித்த செங்கோட்டையன் இந்த நிகழ்வில் கலந்து கொண்டது உற்றுநோக்கப்படுகிறது.
அதிமுக – பாஜக கூட்டணி உருவாகுவதற்கு முன்னர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிச்சாமி சார்ந்த நிகழ்வுகளில் கலந்து கொள்ளாமல் இருந்தார் என்பதும், டெல்லிக்கு இபிஎஸ், செங்கோட்டையன் தனித்தனியே பயணித்து பாஜக தலைவர்களை சந்தித்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு அதிமுக – பாஜக கூட்டணி அமைந்த பிறகு இருவருக்கும் இடையே சற்று சுமூகமான நிலை நிலவுவது இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் செங்கோட்டையன் கலந்து கொண்டதில் வெளிப்படுகிறது என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.