” உதயநிதியை துணை முதல்வராக்குங்கள்., நிர்வாகம் சிறப்பாக இருக்கும்.!” காங்கிரஸ் தலைவர் ‘பளீச்’ பதில்.!
உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக கொண்டுவருவதை காங்கிரஸ் வரவேற்கிறது என அக்கட்சி மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
சென்னை : தமிழ்நாடு துணை முதலமைச்சராக, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிக்கப்படுவார், தமிழக அமைச்சரவையில் முக்கிய மாற்றங்கள் வரும் என்ற பேச்சுக்கள் தற்போது தீவிரமடைந்துள்ளது. அதற்கேற்றாற் போல , நேற்று முன்தினம் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை வழக்கில் இருந்து ஜாமீன் பெற்று விடுதலையாகியுள்ளார்.
இதனால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறிய “மாற்றம் இருக்கும் , ஏமாற்றம் இருக்காது” என்பது போல , விரைவில் மேற்கண்ட மாற்றங்கள் இருக்கும் என்கிறது அரசியல் வட்டாரம். இந்த அறிவிப்புகள் இன்னும் ஒரு சில நாட்களில், அக்டோபர் முதல் வாரத்தில் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
உதயநிதியை துணை முதல்வராக அறிவிப்பதற்கு திமுக தலைவர்கள் மட்டுமின்றி அதன் கூட்டணி கட்சி தலைவர்களும் வரவேற்பை தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் தமிழக மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகையும் , உதயநிதி , துணை முதல்வராக பொறுப்பேற்பதற்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், ” யாரை வேண்டுமானாலும் அமைச்சராக அவர்கள் நியமிக்கலாம். அதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தார்மீக உரிமையும், அதிகாரமும் உள்ளது. துணை முதலமைச்சராக ஒருவரை கொண்டு வருவதற்கும் அவர்களுக்கு உரிமை உள்ளது. இதில் யாரையும் கேட்க வேண்டிய அவசியமில்லை.
காங்கிரஸ் பேரியக்கத்தை பொறுத்தவரையில் துணை முதலமைச்சர் பொறுப்பை மாண்புமிகு இளைஞர் நலன் விளையாட்டுத்துறை அமைச்சர் அன்புச் சகோதரர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு கொடுப்பதை நாங்கள் மனதார வரவேற்கிறோம். துணை முதலமைச்சர் என்ற பொறுப்பை எடுத்து வழி நடத்துவதற்கும், நிர்வாகம் செய்வதற்கும் எல்லா தகுதியும், ஆளுமையும் அன்புச் சகோதரர் உதயநிதிக்கு இருக்கிறது. ஆகவே, தான் நாங்கள் தொடர்ந்து கூறுகிறோம். அப்படி உங்களுக்கு (திமுக) யோசனை இருந்தால் உடனே அவரை துணை முதல்வராக நியமிக்கலாம். எந்தவித பிரச்சனையும் கிடையாது. உதயநிதி துணை முதல்வரானால் , நிர்வாகம் இன்னும் திறம்பட செயல்படும்.” என துணை முதலமைச்சர் பதவி குறித்த கேள்விக்கு காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம் கூறினார்.