காமராஜர் ஆட்சி : காங்கிரஸ் கட்சிக்குள் மோதல்? செல்வப்பெருந்தகை vs மாணிக்கம் தாகூர்!
திமுக ஆட்சியை காமராஜர் ஆட்சி எனக் கூறியதை விமர்சனம் செய்த மாணிக்கம் தாகூர் கருத்து பற்றி கூறுகையில், அவர் புரிதல் இல்லாமல் பேசுகிறார் என மாணிக்கம் தாகூர் பேசியுள்ளார்.

சென்னை : காங்கிரஸ் கட்சி என்றாலே அதில் உட்கட்சி பிரச்சனை அதிகம் இருக்கும் என்பது தொடர்கதையாகி வருகிறது. அதனை வெளிக்காட்டும் விதமாகவே உட்கட்சி பூசல்கள் அவ்வப்போது வெளிப்படவும் செய்கின்றன. தற்போது டிரெண்டில் இருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் இரு தரப்பு என்பது தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, விருதுநகர் காங்கிரஸ் எம்பிமாணிக்கம் தாகூர் தரப்பு ஆகும் .
ஏற்கனவே மாநில தலைவர் செல்வப்பெருந்தகை மாவட்ட தலைவர்களை கலந்து ஆலோசிப்பதில்லை, தன்னிச்சையாக முடிவு எடுக்கிறார் என அதிருப்தி மாவட்ட செயலாளர்கள் டெல்லி தலைமையிடம் புகார் எழுப்பிவந்த நிலையில், கடந்த வாரம் ஒரு நிகழ்வில் பேசிய செல்வபெருந்தகை, திமுக ஆட்சி காமராஜர் ஆட்சியை போல உள்ளது என கூறியிருந்தார்.
மாணிக்கம் தாகூர் விமர்சனம் :
காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகையின் இந்த கருத்து கட்சிக்குள் பலத்த எதிர்ப்புகளை எதிர்கொண்டது. காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், ” பெருந்தலைவர் ஆட்சியை பார்க்காத , படிக்காதவர் அதை மற்றவைகளுடன் ஒப்பிட்டுவது தவறு. அன்புதலைவர் ராஜீவ் காந்தியின் கனவு காமராஜ் ஆட்சி , அது உண்மையான காங்கிரஸ்கார்களின் கனவு. ஒரு நாள் அது நடக்கும்.” என பதிவிட்டு இருந்தார்.
செல்வப்பெருந்தகையை நீக்குக..,
இதனை தொடர்ந்து, சில தினங்களுக்கு முன்னர் டெல்லி சென்ற 2 காங்கிரஸ் எம்எல்ஏக்கள், 25 அதிருப்தி மாவட்ட தலைவர்கள் ஆகியோர், டெல்லி காங்கிரஸ் தலைமையிடம் , செல்வப்பெருந்தகையை மாநில தலைவர் பதவியில் இருந்து விலக்க வேண்டும். என 4 பக்க புகார் அளித்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. கட்சி குறித்து எந்த முடிவு எடுத்தாலும் மாவட்ட தலைவர்களை கலந்து கொள்ளாமல் தனித்து முடிவு எடுக்கிறார். காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சியை நோக்காமல், திமுகவுடனான கூட்டணி உறவுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறார். ஈரோடு கிழக்கு தொகுதியை காங்கிரஸிடம் இருந்து திமுகவுக்கு விட்டுக்கொடுத்துவிட்டார் என பல்வேறு குற்றசாட்டுகளை செல்வப்பெருந்தகை மீது வைத்ததாக கூறப்படுகிறது.
சீரமைக்கிறோம்., வேரறுக்கவில்லை..,
இது குறித்து இன்று சென்னையில் கட்சி நிகழ்வில் கலந்து கொண்ட மாநில தலைவர் செல்வபெருந்தகையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்புகையில், கட்சியில் கிராம அமைப்புகளை நாங்கள் சீரமைக்கும் பணிகளில் ஈடுபடுகிறோமே தவிர வேரறுக்க செயல்படவில்லை என தெரிவித்தார். அடுத்து மாணிக்கம் தாகூர் பற்றிய விமர்சனத்திற்கு, அவர் அரசியல் புரிதல் இல்லாமல் பேசியுள்ளார் என கூறியுள்ளார்.