அண்ணாமலை என்ன ஜோசியரா? – செல்லூர் ராஜு பதிலடி
Sellur raju: பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு அரசியல் தெரியாது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம்.
தேனியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை ஆதரித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது, அதிமுகவை காண்ட்ராக்ட் காரர்களுக்கு தாரை வார்த்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. ஒப்பந்தக்காரர்களுக்கான கட்சியாக மாறிவிட்டது.
அதிமுக வேட்பாளர்களை பார்த்தாலே அது தெரியும் என பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா போல் 2024 தேர்தலுக்கு பின் தமிழகத்தில் டிடிவி தினகரனால் மாற்றம் வரும். மாற்றம் வர வேண்டும் என்பதற்காகவே டிடிவி தினகரன் களமிறங்கியுள்ளார்.
மக்களவை தேர்தலுக்கு தேர்தல் முடிந்த பிறகு அதிமுக கட்சி டிடிவி தினகரனின் வசமாகும் என்றும் தெரிவித்தார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேச்சுக்கு அதிமுகவினர் பதிலடி கொடுத்து வருகின்றனர். அந்தவகையில், அண்ணாமலை என்ன ஜோசியரா என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சித்தார்.
மதுரையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய செல்லூர் ராஜுயிடம் அண்ணாமலை பேச்சு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் கூறியதாவது, பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு அரசியல் தெரியாது. அவருக்கு பலமுறை பதிலடி கொடுத்துவிட்டேன். இதனால் அவரை பற்றி பேச எதுவுமில்லை என்றார்.
மேலும் டிடிவி வசம் அதிமுக செல்லும் என்று கூறும் அண்ணாமலை ஜோசியரா? அல்லது விசுவாமித்திரரா?. இந்த அண்ணாமலை ஒன்றும் சூப்பர் ஸ்டார் கிடையாது. பாஜக மாநில தலைவரான பிறகுதான் அவரையே தெரியும், ரோடு ஷோவுக்கு வரவழைத்து பிரதமர் மோடியின் செல்வாக்கை குறைந்தவர் தான் அண்ணாமலை.
இவரது பேச்சு வேடிக்கையானது, நகைசுவையானது. தோல்வி பயத்தால் அவ்வாறு பேசி வருகிறார். மக்களவை தேர்தல் முடிவுக்கு பிறகு அண்ணாமலை எங்கு இருப்பார் என்று தெரியாது. பிரதமரின் பாண்டிபஜார் ரோடு ஷோவில் கூட்டம் இல்லை. அமித்ஷா ரோடு ஷோவை கஒருவர் திரும்பி பார்க்கவில்லை எனவும் விமர்சித்து, அதிமுக என்பது பீனிக்ஸ் பறவை போன்றது எனவும் தெரிவித்தார்.