“மழை வரத்தான் செய்யும், மதுரையை தார்பாய் போட்டு மூடிடலாமா.?” செல்லூர் ராஜு காட்டம்
மதுரையில் பாதாள சாக்கடை பணிகள் குறித்து ஆய்வு செய்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அதிகாரிகளிடம், "மழை பெய்யத்தான் செய்யும், அதற்காக தார்பாய் போட்டு மூடிவிடலாமா.?" என கடிந்துகொண்டார்.
மதுரை : இன்று மதுரை மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜு மதுரை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதாள சாக்கடை திட்டத்தை பார்வையிட்டார். அப்போது அரசு அதிகாரிகளிடம் இப்பணிகள் குறித்த விவரங்களை அறிந்து கொண்டார்.
மதுரை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் எப்போது முடியும் என அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அப்போது மழை பெய்வதால் பணிகள் தாமதமாகி வருகிறது என கூறியதால் , “மழை பெய்யத்தான் செய்யும். அப்புறம், மதுரை முழுக்க தார்பாய் போட்டு மூடிவிடலாமா.?” என சற்று கோபத்துடன் கூறினார் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு .
அதற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜு, “20 நாட்களாக இங்கு சாக்கடை நீர் தேங்கி இருக்கிறது. ஏன் அமைச்சர்கள் வந்து இங்கு பார்வையிடவில்லை.? நான் ஏற்கனவே கூறியது போல தற்போது இங்கு தொற்று நோய் பரவ தொடங்கியுள்ளது. அதிகாரிகள் எல்லாம் அசால்டாக இருக்கிறார்கள். கேட்டால் பணம் இல்லை என கூறுகிறார்கள்.
முதலமைச்சர் பொதுப்பணித்துறைக்கு ரூ.11 கோடி ஒதுக்கியுள்ளதாக கூறுகிறார். அப்படியென்றால் அவர் எப்படியும் அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தி இருப்பார். அதிகாரிகள் மதுரை பாதாள சாக்கடை பற்றி கூறியிருப்பர். அப்படி இருந்தும் பணிகள் மெதுவாக தான் நடக்கிறது.
திமுக அரசும், கூட்டணி பலம் இருக்கிறது என பேருக்கு செயல்பட்டு வருகிறது. இவர்கள் கூட்டணி எல்லாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்படும். ” என ஆளும் திமுக அரசை விமர்சித்து தனது கருத்துக்களை கூறினார் முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு.