“பொங்கல் பரிசாக ரூ.30 ஆயிரம் கொடுக்க வேண்டும்.” செல்லூர் ராஜு அதிரடி கோரிக்கை!
பொங்கல் பரிசு தொகையாக ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கோரிக்கை வைத்துள்ளார்.
மதுரை : தமிழக அரசு, இந்த முறை பொங்கல் சிறப்பு பரிசாக ஒரு முழு கரும்பு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை ஆகியவை அடங்கிய தொகுப்பை வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த முறை பொங்கல் பரிசு தொகையாக எதுவும் வழங்கப்படவில்லை.
இதனை குறிப்பிட்டு பல்வேறு கட்சியினரும் பொங்கல் பரிசுத்தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். திமுக கூட்டணி கட்சிகளே இந்த கோரிக்கையை ஆளும் திமுக அரசுக்கு முன்வைத்து வருகின்றன. இப்படியான சூழலில் இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, பொங்கல் பரிசுத்தொகையாக ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், பொங்கல் பரிசுத்தொகை ஏன் கொடுக்கவில்லை என்பது அவர்களுக்கு தான் வெளிச்சம். பொங்கல் பரிசு தொகுப்பாக அதிமுக ஆட்சியில் 2,500 ரூபாய் வரையில் வழங்கபட்டது. அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் பொங்கல் பரிசுத்தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என கூறினர். அப்போது 5 ஆயிரம் ரூபாய் என்பது இப்போது ரூ.30 ஆயிரம் ஆகும்.
அப்படி என்றால், இந்த முறை பொங்கல் பரிசுத்தொகையாக ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும். போன முறையே போராடி தான் ஒரு முழு கரும்பும், ரூ.1000 பரிசுத்தொகை கிடைத்தது. ” என செல்லூர் ராஜு கோரிக்கை வைத்தார். மேலும் , இந்த ஆண்டு அதிமுகவில் உறுதியான கூட்டணி அமையும். அனைவரும் ஒன்றிணைவர். இதனை எடப்படியார் பார்த்துகொள்வார் என்றும் செல்லூர் ராஜு பேசினார்.