வக்கீலை தாக்கியது மட்டுமல்லாமல், செல்பி போட்டோவையும் சப்-இன்ஸ்பெக்டர் எடுப்பாரா?
வக்கீலை தாக்கி செல்பி எடுத்த சப்-இன்ஸ்பெக்டரின் செயலை மன்னிக்க முடியாது என உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் இன்று காலையில் வழக்குகளை விசாரிக்கத் தொடங்கினார்கள். அப்போது சென்னை ஐகோர்ட்டு வக்கீல் சங்கத்தின் தலைவர் ஜி.மோகன கிருஷ்ணன் ஆஜராகி ஒரு கோரிக்கை முன்வைத்தார்.
அவர், ‘தூத்துக்குடி மாவட்டம், தட்டார்மடம் போலீஸ் நிலையத்துக்கு வக்கீல் பெரியசாமி என்பவர் தன்னுடைய கட்சிக்காரருடன் புகார் செய்ய சென்றுள்ளார்.
அந்த புகாரை பெற்றுக்கொண்ட சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரம், வழக்குப்பதிவு செய்யவில்லை. அந்த புகாரை பெற்றுக் கொண்டு ரசீது (சி.எஸ்.ஆர்.) தரும்படி கேட்ட வக்கீலை கொடூரமாக சப்-இன்ஸ்பெக்டர் அடித்துள்ளார்.
பின்னர், அந்த வக்கீலை செல்போனில் ‘செல்பி’ எடுக்கச் சொல்லியுள்ளார். அந்த ‘செல்பி’ படத்தில் முகத்தில் ரத்தம் வடிந்த நிலையில் வக்கீல் உட்கார்ந்திருக்கிறார். அவருக்கு பின்னர், அவரை அடித்த சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரம் நின்றபடி ‘போஸ்’ கொடுத்துள்ளார். இந்த படம் சமூக வலைதளங்களில் பரவியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து இந்த ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து, சப்-இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறினார்.
அந்த ‘செல்பி’ படத்தை நீதிபதிகளிடம், மோகன கிருஷ்ணன் கொடுத்தார். அந்த படத்தை பார்த்த நீதிபதிகள் அதிர்ச்சியடைந்தனர்.
அரசு பிளீடர் ராஜகோபாலனிடம், இந்த படத்தை காட்டிய நீதிபதிகள், ‘என்ன இது? இதுபோன்ற செயல்களை ஒருபோதும் ஏற்க முடியாது.
வக்கீலை தாக்கியது மட்டுமல்லாமல், செல்பி போட்டோவையும் சப்-இன்ஸ்பெக்டர் எடுப்பாரா? சப்-இன்ஸ்பெக்டர் செயலை மன்னிக்க முடியாது. இந்த சம்பவம் குறித்து தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்கிறோம். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு எடுக்கப்படும்’ என்று கூறினார்கள்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.