எங்கு நடந்தாலும் சுயமரியாதை திருமணம் செல்லும்.! உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு.!
கடந்த ஏப்ரல் மாதம் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த இளவரசன் என்பவர் திருப்பூரில் வைத்து ஒரு பெண்ணை சுயமரியாதை திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து, அந்த பெண்ணின் பெற்றோர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.
இதனையடுத்து, இந்த மனுவை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள், இந்து திருமண சட்டப்படி வழக்கறிஞர்கள் முன் நடைபெற்ற திருமணம் செல்லாது என உத்தரவிட்டனர். இந்த நிலையில், மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவை எதிர்த்து இளவரசன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், வழக்கறிஞர் அலுவலகத்தில் நடந்தாலும் சுயமரியாதை திருமணம் செல்லும். சுயமரியாதை திருமணங்களைப் பலர் அறிய நடத்த வேண்டிய அவசியம் இல்லை. இந்து திருமண சட்டத்தின் 7ஏ பிரிவை மேற்கோள்காட்டி உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், வழக்கறிஞர் அலுவலகத்தில் நடந்த திருமணம் செல்லாது என மதுரை உயர்நீதிமன்ற கிளை அளித்த தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர்.