விஜயலட்சுமி வழக்கில் கிழிக்கப்பட்ட போலீஸ் சம்மன்? களோபரமான சீமான் வீடு!
சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மனை கிழித்த விவகாரத்தில், விசாரணைக்கு வந்த போலீசாரை சீமான் வீட்டின் காவலாளி தாக்கியதுடன் துப்பாக்கியை காட்டி மிரட்டல் விடுத்துள்ளார்.

சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு காவல்துறை இரண்டாவது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது. இன்று காலை 10 மணிக்கு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு சீமானுக்கு அனுப்பட்ட சம்மனில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், சீமான் இன்று விசாரணைக்காக ஆஜராகவில்லை, இதையடுத்து நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகார் வழக்கில், சீமான் நாளை காலை 11 மணி அளவில் சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என அவரது வீட்டில் சம்மன் அறிக்கை ஒட்டப்பட்டது.
அதை தொடர்ந்து, போலீசார் ஓட்டிய சம்மனை வீட்டில் வேலை செய்பவர் கிழித்ததாக கூறப்படுகிறது. இதனை விசாரிக்க சென்ற போலீசாரையும் பணி செய்ய விடாமல் தடுத்ததால் அவரது வீட்டிற்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் அங்கிருந்த நபர் ஒருவர் துப்பாக்கியை காட்டி போலீசாரை மிரட்டியதால் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து தடுத்தவரையும், மிரட்டியவரையும் போலீசார் கைது செய்தனர். இதனிடையே, சீமான் நாளை காலை விசாரணைக்கு ஆஜராகாவிட்டால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக, தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரிய சீமானின் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததுடன், நடிகை அளித்த புகாரில் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
சீமானுக்கு மீண்டும் சம்மன்
நடிகை பாலியல் வழக்கில் ஆஜராக இன்று சீமானுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், அவரது சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சங்கர், சீமான் ஆஜராக 4 வாரம் அவகாசம் வேண்டும் எனக் கடிதம் அளித்துள்ளார். இதை தொடர்ந்து, நடிகை விஜயலட்சுமி பாலியல் புகார் வழக்கில், சீமான் நாளை காலை 11 மணி அளவில் சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என அவரது வீட்டில் சம்மன் ஒட்டப்பட்டுள்ளது.
மன்னிப்புக் கேட்ட சீமான் மனைவி
போலீசாரை வீட்டுக் காவலாளி தாக்க முயன்ற சம்பவத்திற்காக போலீசாரிடம் சீமான் மனைவி கயல்விழி மன்னிப்புக் கேட்டார். சீமானின் வீட்டிற்குள் செல்ல முயன்ற போலீசாரை, அங்கிருந்த காவலாளி தடுத்துள்ளார். அப்போது அவரிடம் துப்பாக்கி இருந்துள்ளது. அதை போலீசார் கேட்டபோது, இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இச்சம்பவத்திற்கு கயல்விழி மன்னிப்பு கோரியுள்ளார்.
உச்ச நீதிமன்றத்தை நாடிய சீமான்
விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில், உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக சீமான் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த விவகாரத்தில், முன்வைக்கப்பட்ட வாதங்களை முழுமையாக கருத்தில் கொள்ளவில்லை எனவும், இந்த மேல்முறையீட்டு மனுவின் தீர்ப்பு வரும் வரை, 12 வாரங்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கவும் அவர் மனுவில் வலியுறுத்தியுள்ளார்.