“சீமான் கருத்துக்கள் பதற்றத்தை ஏற்படுத்துகிறது!” உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
தந்தை பெரியார் குறித்து சீமான் பேசும் கருத்துக்கள் சமூகத்தில் பதற்றத்தை உண்டு செய்கின்றன என மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது தந்தை பெரியார் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை பதிவிட்டார். அதிலும், தந்தை பெரியார் உடல் இச்சை பற்றி கூறியதாக சீமான் கூறிய கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் கடும் எதிர்வினைகளை உண்டாக்கியுள்ளது.
சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பல்வேறு அரசியல் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு காவல் நிலையங்களில் அவர் மீது புகார்கள் பதிப்பட்டு வருகின்றன. அரசியல் கட்சி தலைவர்களும் சீமானுக்கு எதிராக கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
தந்தை பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சீமான் மீது வழக்கு பதிவு செய்து அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.
இந்த வழக்கானது மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி நிர்மல் குமார் முன் இன்று விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கு விசாரணையில், பெரியார் குறித்து சீமான் பேசும் கருத்துக்கள் சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என கருத்து தெரிவித்தார்.
மேலும், சீமான் பேசிய கருத்துக்கள் குறித்து வழக்கு பதிவு செய்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும். இந்த வழக்கு விசாரணை குறித்த அறிக்கையை வரும் ஜனவரி 20ஆம் தேதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என மதுரை அண்ணா நகர் காவல் நிலையத்திற்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி நிர்மல்குமார் கூறியுள்ளார்.