“டிரம்ப் உடன் கூட்டணி வைக்க போகிறேன்..,” சீமான் தடாலடி அறிவிப்பு!
2026 தேர்தலில் டிரம்ப் கட்சியுடன் தான் கூட்டணி வைக்க போகிறேன் என கலகலபபாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை : இன்று சென்னையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில், மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள வக்பு வாரிய திருத்த சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் நிறைவு பெற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்த சீமான், பல்வேறு அரசியல் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
அவரிடம் செய்தியாளர்கள் 2026 சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி வைக்க போகிறீர்க்ள் என கேட்டபோது, “நீங்கள் ஒரு கட்சி ஆரம்பியுங்கள் நான் கூட்டணி வைக்கிறேன்” என கலகலப்பாக பதில் கூறிய சீமான், “நான் கூட்டணி வைக்க ஒரே ஒரு கட்சியுடன் தான் வாய்ப்பிருக்கு. அது அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் தான். ” எனக் கூறிவிட்டு, “இன்னும் எத்தனை காலத்திற்கு இதே கேள்வியை கேட்டுக்கொண்டு இருப்பீர்கள்?” என கூறினார.
அடுத்ததாக, பாஜக கொடுத்த நெருக்கடி, நிர்பந்தத்தின் பெயரில் தான் அதிமுக அடிபணிந்து கூட்டணி வைத்துள்ளது என்ற குற்றசாட்டு இருக்கிறது என்ற கேள்விக்கு, “இருக்கிறது என்றால் இருக்கிறது. இது பற்றி அதிமுக தலைவர்கள் தான் பதில் கூற வேண்டும். அதிமுக, திமுக இருவரும் ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள். இருவரையும் அடித்து துவைப்பதுதான் எங்கள் வேலை.” என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.