சீமான் தன்னுடைய செய்தி வரவேண்டும் என்பதற்காக பெரியார் குறித்து பேசுகிறார் – அமைச்சர் பொன்முடி சாடல்!
பொய்யான போட்டோவை எடிட் செய்து வெளியிட்டவர்தான் சீமான் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் : நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியார் குறித்து பேசியது ஒரு பக்கம் சர்ச்சைகளை கிளப்பியிருந்த நிலையில், பெரியார் கூட்டமைப்பு மற்றும் மே 17 இயக்கத்தினர் ஜனவரி 22 -ஆம் தேதி முற்றுகையிட்டனர். அதுமட்டுமின்றி சீமான் பேசியதற்கு அவர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டது.
இருப்பினும் தொடர்ச்சியாகவே சீமான் பெரியார் குறித்து பேசி வருகிறார். குறிப்பாக நேற்று கூட ” பெரியார் அடிப்படையிலேயே பிழையானவர். தமிழ் முட்டாள்களின் மொழி தமிழில் ஆங்கிலம் கலந்து பேசவேண்டும் என்று கூறியவர். கர்நாடகா நாட்டில் பிறந்த அவர் தமிழ்நாட்டுக்காக என்ன செய்திருக்கிறார்? பெரியார் தொடர்பாக நான் இன்னும் முழுமையாக பேசவே தொடங்கவில்லை..கையை தான் ஓங்கி இருக்கிறேன் அதற்குள் இவ்வளவு அலறுகிறார்கள்” என பேசியிருந்தார்.
இந்நிலையில், பெரியார் குறித்து சீமான் பேசியதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், அமைச்சர் பொன்முடி விழுப்புரம் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது இது குறித்து பேசியுள்ளார். இது பற்றி பேசிய அவர் “பெரியார்..அண்ணா…கலைஞர் வழியில் நடக்கும் ஆட்சி தான் திமுக ஆட்சி.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பலமுறை இதனை கூறியிருக்கிறார். எனவே, இன்றைக்கு புதிதாக வந்துவிட்டு..எங்கேயும் ஆள் இல்லாதவர்கள் எல்லாம் பேசுபவர்களுக்கு நாங்கள் பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. மனசாட்சியோடு சிந்தித்தாலே (சீமான்) அவருக்கே தெரியும். சிந்திக்காமல் எதையோ பேசிக்கொண்டு இருக்கிறார்.
பிரபாகரனுடன் எடுத்துக்கொண்டதாக டூப்ளிகேட் போட்டவை வைத்து வெளியிட்ட அவர். அவர் என்ன நினைக்கிறார் என்றால் இந்த மாதிரி நாம் பேசினோம் என்றால் கூட நம்மளுடைய புகைப்படம் செய்திகளில் வரும் என்று நினைத்து பேசுகிறார். இது தமிழர்களுடைய ஆட்சி திமுகவை யாரும் தொட்டு கூட பார்க்கமுடியாது” எனவும் அமைச்சர் பொன் முடி தெரிவித்துள்ளார்.