“விஜய் பங்கேற்ற விழாவிற்கு என்னையும் அழைத்தார்கள்” – சீமான்!
விஜய் பங்கேற்ற விழாவிற்கு என்னையும் அழைத்தார்கள் என்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
சென்னை: அம்பேத்கரின் 68-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, நேற்றைய தினம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்கிற தலைப்பில் நூல் வெளியீட்டு விழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்த புத்தக வெளியீட்டு விழாவில் தவெக தலைவர் விஜய் பங்கேற்றார். நூலை விஜய் வெளியிட, அதனை ஆனந்த் டெல்டும்டே, ஓய்வு பெற்ற நீதிபதி சந்தூரு பெற்றுக்கொண்டனர். முன்னதாக, இந்த நிகழ்வில் விசிக தலைவர் திருமாவளவன் கலந்து கொள்வதாக கூறப்பட்டது. பின்னர் அவர் கலந்து கொள்ளவில்லை என்ற விளக்கம் வெளியாகிவிட்டது.
ஆனால், இந்த புத்தக வெளியீட்டு விழாவில் தவெக தலைவர் விஜய் கலந்துகொண்டு பேசுகையில், திமுக, பாஜகவை கடுமையாக விமர்சித்தார், மேலும் திருமாவளவன் குறித்து பேசியதும் தமிழக அரசியலில் விவாத பொருளாக மாறியுள்ளது. இந்த நிலையில், அம்பேத்கரின் புத்தக வெளியீட்டு விழாவிற்கு என்னையும் அழைத்தார்கள் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர்,” அம்பேத்கரின் புத்தக வெளியீட்டு விழாவிற்கு என்னையும் அழைத்தார்கள். முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி உள்ளிட்ட பலரையும் அழைத்திருந்தனர். விசிக தலைவர் திருமாவளவன் புத்தகத்தை வெளியிட்டு அதை நான் பெறுவதாக இருந்தால் சரியாக இருந்திருக்கும்.
எனக்கு அம்பேத்கர் பற்றி பேச யாரும் மேடை அமைத்துத் தர வேண்டியதில்லை. எல்லா நாளும் நான் பேசுவேன். அம்பேத்கரைப் பற்றி இந்த தலைமுறை பிள்ளைகள் அறிந்து கொள்ளும் வகையில் எவ்வாறு அவர்களிடம் சென்றாலும் அதை ஏற்றுக்கொண்டு வரவேற்கணும். அந்த வகையில் தம்பி விஜய் அம்பேத்கரின் புத்தகத்தை வெளியிடுவதை நான் வரவேற்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.