சீமான் வீட்டு களோபரம் : “நாட்டை பாதுகாத்தவருக்கு இந்த நிலைமையா?” அமல்ராஜ் மனைவி வேதனை!
இந்திய ராணுவ எல்லை படையில் இருந்தவருக்கு இப்படி ஒரு நிலைமையா? என கைதான சீமான் வீட்டு காவலாளி அமல்ராஜ் மனைவி செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ளார்.

சென்னை : நடிகை வழக்கில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நேரில் ஆஜராகவில்லை என்று சென்னை வளசரவாக்கம் போலீசார், சம்மனை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டில் ஒட்டிவிட்டு சென்றனர். அதில் நாளை காலை ஆஜராகவில்லை என்றால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என குறிப்பிடப்பட்டதாக தெரிகிறது.
இந்நிலையில், அந்த சம்மனை ஒருவர் கிழித்துவிட்டார். அதுகுறித்து விசாரணை செய்ய வளசரவாக்கம் போலீசார் சீமான் வீட்டிற்கு சென்ற போது, அங்கு பாதுகாவலர் பணியில் இருந்த முன்னாள் ராணுவ வீரர் அமல்ராஜுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதில் அமல்ராஜ், தான் வைத்திருந்த துப்பாக்கியை போலீசாரிடம் நீட்டியதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அமல்ராஜை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.
இச்சம்பம் குறித்து அமல்ராஜ் மனைவி மஞ்சுளா செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். அவர் கூறுகையில், ” இதெல்லாம் தேவையில்லாத வேலை. அண்ணி (சீமான் மனைவி கயல்விழி) தனியாக இருக்கிறார்கள் என்று பாதுகாப்புக்கு சென்றவரை (அமல்ராஜ்) இப்படி தான் போலீசார் இழுத்துக்கொண்டு வருவார்களா? இது என்ன ஒரு அராஜகம்?
விசாரணைக்கு இப்படி தான் கூப்பிட்டு கொண்டு செல்வார்களா? அவர் இந்திய ராணுவத்தில் எல்லை பாதுகாப்பு படையில் 25 வருடங்கள் வேலை பார்த்துள்ளார். முன்னாள் ராணுவ வீரரை இப்படி தான் நடத்துவீர்களா? அவர் ஜம்மு காஷ்மீரில் 18 வருடம் வேலை பார்த்துள்ளார். மணிப்பூர் உள்ளிட்ட இடங்களில் வேலை பார்த்துள்ளார்.
உயர் அதிகாரிகளிடம் இதுகுறித்து புகார் அளிப்போம். இன்னும் அவரை பார்க்க விட மறுக்கிறார்கள். தமிழக அரசுக்கு ஒரே ஒரு கோரிக்கை தான், இனிமேல் இதுபோல நடக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். என கூறினார்.
போலீசாரை நோக்கி அமல்ராஜ் துப்பாக்கி காட்டியதாக கூறப்படும் குற்றசாட்டு குறித்து பேசுகையில், அவர் ஒருகாலமும் அப்படி செய்ய மாட்டார். விதிமுறைகளை அவர் ஒருபோதும் மீறியதில்லை. இதெல்லாம் ஜனநாயக நாட்டில் நடக்கிறது. அவர் துப்பாக்கியை போலீசாரிடம் சரண்டர் செய்ய தான் போயிருக்காங்க. 2018 ஆம் ஆண்டு முதல் இவர் துப்பாக்கி வைத்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக சீமான் வீட்டில் வேலை பார்த்து வருகிறார். என் பெயர் மஞ்சுளா நான் ஒரு ஆசிரியர், அவர் முன்னாள் ராணுவ வீரர். எங்களுக்கே இப்படி ஒரு நிலைமையா? ” என கைதான அமல்ராஜ் மனைவி மஞ்சுளா பேட்டியளித்துள்ளார்.